எச்‌ஐ‌வி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு எச்‌ஐ‌வி தொற்று இல்லை

கடந்த ஆண்டு இறுதியில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 23 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு பரிசோதிக்காமல் எச்.ஐ.வி தொற்று உள்ளவரின் ரத்தத்தை செலுத்திய சம்பவம் நாடு முழுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ரத்த வங்கியின் ஊழியர்கள் முறையாக பரிசோதிக்காமல் ரத்தத்தை செலுத்தியதால் இந்த விபரீதம் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

 

பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நலவழக்கில் நீதிமன்றம், அந்த பெண்ணுக்கு ரூ.25,000,00 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.இந்த நிலையில், எச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு பிறந்த ஆறு மாத குழந்தைக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட எச்.ஐ.வி ரத்தப் பரிசோதனையில் எச்.ஐ.வி எதிர்மறை என்று முடிவு வந்துள்ளது.

 

ரத்தத்தை பரிசோதிக்காமல் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று ரத்தத்தை செலுத்தியதில் மருத்துவமனையின் ஊழியர்கள் இழைத்த குற்றம் பெரிய குற்றம். இந்த விவகாரத்தில் அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த தவறுக்கு தமிழக அரசும் பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தது.

 

இந்த விஷயத்தை அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஊடகங்களிடம் கூறியபோது, இது மன்னிக்க முடியாத குற்றம். அந்த பெண்ணுக்கு உரிய மருத்துவ சிகிச்சையை சுகாதாரத் துறை செய்யும் என்று கூறினார்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு செய்த எச்.ஐ.வி ரத்தப் பரிசோதனையில் எதிர்மறை என்று முடிவு வந்திருப்பது பலரையும் ஆறுதல் அடைய வைத்துள்ளது.

 

இது தொடர்பாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் டீன் வனிதா கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு 6 வாரத்தில் ஒரு எச்.ஐ.வி ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், எச்.ஐ.வி எதிர்மறை என்று முடிவு வந்தது. இரண்டாவது முறையாக 6 மாதத்தில் செய்த பரிசோதனையிலும் எச்.ஐ.வி எதிர்மறை என்று முடிவு வந்துள்ளது. அந்த பெண்ணுக்கு இயல்பான பிரசவம்தான் நடந்தது. குழந்தை 6 கிலோ எடையுடன் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது. இதற்கு பிறகு, 18 மாதத்தில் செய்யப்படும் பரிசோதனையிலும் எச்.ஐ.வி எதிர்மறை என்றே முடிவு வரும் என்று எதிர் பார்க்கிறோம் என்று கூறினார்.


Leave a Reply