கள்ளத் தொடர்பை கண்டித்த மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் இராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் உத்தரவு

இராமநாதபுரம் சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் காளீஸ்வரன். ஆட்டோ டிரைவரான இவருக்கும் புஷ்பவள்ளிக்கும் 2003ல் திருமணம் நடந்தது. இந்நிலையில் இராமநாதபுரத்தில் பாத்திரக் கடையில் வேலை பார்த்த முனீஸ்வரிக்கும், காளீஸ்வரனுக்கும் இடையே கடந்த 2010ல் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை கண்டித்ததால் புஷ்பவள்ளிக்கும், காளீஸ்வரனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

 

இது குறித்து போலீசில் புஷ்பவள்ளி புகார் கொடுத்தார். இது தொடர்பாக கடந்த 2012 மே 26ல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இதனால் ஆத்திரமடைந்த காளீஸ்வரன், உருட்டு கட்டையால் மனைவி புஷ்பவள்ளியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த புஷ்பவள்ளி உயிரிழந்தார். இது தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து, முனீஸ்வரனை கைது செய்தனர்.

அரசு தரப்பில் வழக்கறிஞர் மனோரஞ்சிதம் ஆஜரானார். இந்த வழக்கின் இறுதி விசாரணை இராமநாதபுரம் மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. காளீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


Leave a Reply