132 நாட்கள் ” கூண்டு வாசம் “…முடிந்து சந்தோஷமாக வெளியே வந்த செல்லப்பிள்ளை சின்னத்தம்பி யானை

கோவை மக்களின் செல்லப்பிள்ளையான சின்னத்தம்பி யானை விளை நிலங்களுக்கு பாதிப்பு தருவதாக கூறி, பெரியதடாகம் பகுதியில் வைத்து வனத்துறையினர் கடந்த ஜனவரி மாதம் சின்னத்தம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.பின்னர், நீண்ட போரட்டத்துக்குப் பினனர் பொள்ளாச்சி டாப்ஸிலிப் அடுத்துள்ள வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டான் சின்னத்தம்பி. வரகளியாறு பகுதியில் விட்ட ஒரே வாரத்தில் தன் வாழ்விடத்தைதையும் உறவுகளையும் தேடி மீண்டும் வெளியில் வந்தான்.

 

அங்கலக்குறிச்சி பகுதியில் தன் பயணத்தைத் தொடங்கிய சின்னத்தம்பி, உடுமலைப்பேட்டை கண்ணாடிப்புத்தூர் வரை சென்றான். 100 கிமீ மேல் பயணித்தாலும், வழியில் யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல், தன் பயணத்தைத் தொடர்ந்தான் சின்னத்தம்பி. இதைத்தொடர்ந்து, அங்கும் சின்னத்தம்பியால் விளை நிலங்கள் சேதப்படுத்துப்படுவதாக மீண்டும் புகார் எழுந்தது. இதனையடுத்து சின்னத்தம்பியை பிடித்து, கும்கியாக மாற்ற வனத்துறை முடிவு செய்தது.

 

இதற்கு எதிர்ப்புகள் எழுந்தன, போராட்டங்களும் நடந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், சின்னத்தம்பியை பிடித்து வனத்துறை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து மீண்டும் பிப்ரவரி 15-ம் தேதி மயக்க ஊசி செலுத்தப்பட்டு சின்னத்தம்பி மீண்டும் பிடிக்கப்பட்டு வரகளியாறு முகாமில் உள்ள மரக்கூண்டில் அடைக்கப்பட்டான்.

தொடர்ந்து கூண்டில் அடைக்கப்பட்ட சின்னத்தம்பி யானைக்கு உணவு உட்கொள்வது பாகன்கள் சொல்லும் வேலையை செய்வது அவர்களின் கட்டளைக்கு அடிபணிவது என பல்வேறு பயிற்சிகள் சின்னத்தம்பிக்கு அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்த சின்னத்தம்பி 132 நாட்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை மாலை மரக் கூண்டிலிருந்து வெளியே எடுக்கப்பட்டான் பூஜைகள் செய்யப்பட்டு கூண்டிலிருந்து ஒவ்வொரு கட்டைகளாக அகற்றப்பட தனது தும்பிக்கையை கூண்டிலிருந்து வெளியே நீட்டி ஆனந்தமாக கூண்டிலிருந்து வெளியே வந்தான் சின்னத்தம்பி.

 

சில நாட்களுக்கு வரகளியாறு பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் கோழி கமுதியில் உள்ள யானைகள் வளர்ப்பு மையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கும் சில பயிற்சிகள் அளித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த பயிற்சியின் போது தங்களுடைய கட்டளைகளை சுலபமாக புரிந்து கொண்டு தங்களுடைய வேலையை எளிதாக சின்னத்தம்பி முடித்ததாகவும், எவ்வளவோ யானைகளை பழக்கப்படுத்தி இருந்தாலும் இந்த சின்னத்தம்பி யானையை பழக்கப் படுத்தியது தங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக பாகன்கள் தெரிவித்தனர்.

 

எது எப்படியோ சின்னத்தம்பி யானை வனத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து கும்கியாக மாற்றப்பட்டு இருந்தாலும், யானைகள் வனப்பகுதியிலிருந்து ஏன் வெளியேறுகிறது அதற்கு என்ன காரணம் என்பதை வனத்துறையினர் அறிந்திருந்தாலும், யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அவர்களால் முடியவில்லை காரணம் இதிலும் அரசியல்…


Leave a Reply