கோவை மாவட்டம் கணுவாய் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் ரமேஷ்.இயற்கை ஆர்வலரான இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டவர்.சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பிரபலமான இவர் மக்களுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்ட மனிதர்.இவருடைய மகள் சாந்தலா ஆனைகட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.தினமும் மகளை மருத்துவரின் மனைவி தனது டூவீலரில் சென்று பள்ளியில் இருந்து அழைத்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் பள்ளியில. இருந்து நேற்று மாலை மருத்துவர் ரமேஷின் மனைவி ஷோபனா டூவீலரில் சென்று மகளை மாலை பள்ளியில் இருந்து அழைத்துச்சென்றுள்ளார்.அப்போது,ஜம்புகண்டிகை எனுமிடத்தின் அருகே வந்த பொழுது அசுர வேகத்தில் எதிரே வந்த மற்றொரு டூவீலர் ஷோபனாவின் டூவீலர் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஷோபனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
சாந்தலா உடலின் பல இடங்களில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளார்.சம்பவம் குறித்து அறிந்து பதறிய படி வந்த மருத்துவர் ரமேஷ் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சாந்தலாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.சடலமாக கிடந்த தனது மனைவியின் உடலை பார்த்து கதறித்துடித்த மருத்துவர் ரமேஷ் மனைவியின் சடலத்துடன் அப்பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையால் தான் தனது குடும்பம் இப்பேர்பட்ட விபத்தை சந்தித்துள்ளது.
அதனால் அப்பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும்,மது குடித்து விட்டு வருபவர்களால் அப்பகுதியில் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் நீண்ட நாட்களாக குற்றஞ்சாட்டி வந்தனர்.மேலும்,ஷோபனாவின் மீது டூவீலரில் மோதிய ஆனைகட்டி பகுதியினை சேர்ந்த பாலாஜி குடிபோதையில் இருந்ததாகவும்,போதை தான் இவ்விபத்திற்கு காரணம் எனவும்,இப்பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூடும் வரை தனது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் கூறி 4 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் திரண்டு இருந்த ஒன்று திரட்டி போராட்டம் நடத்தினார் மருத்துவர் ரமேஷ்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த துடியலூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி,கோவை வடக்கு தாசில்தார் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர் ரமேசுடன் நடத்திய பேச்சுவாரத்தையில் அப்பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினை மூட நடவடிக்கை எடுக்கப்படும்,விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தின் பேரில் போராட்டத்தை கைவிட்டார் ரமேஷ்.பின்னர்,கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மகள் சாந்தலாவை சென்று கண்ணீருடன் பார்த்தார்.
மேலும்,சடலத்தை மீட்ட காவல் துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர்.இச்சம்பவம் குறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பொதுமக்களுக்காக சேவையாற்றிய மருத்துவர் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி விபத்தினால் உயிரிழந்த மனைவியின் சடலத்துடன் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அவரின் சேவை மனப்பான்மையை அறிந்து கோவை மக்களை கண் கலங்க செய்துள்ளது.