வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி

Publish by: --- Photo :


வெளிநாடு அழைத்து செல்வதாக கூறி மீண்டும் ஒரு மோசடி அரங்கேறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்டு காவல் நிலையத்தை முற்றுகையிட பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 19 பேரிடம் வெளிநாட்டில் செயல்படும் சூப்பர் மார்க்கெட்டில் வேலை வாங்கி தருவதாக விருத்தாசலத்தை சேர்ந்த அபூபக்கர் என்ற ஏஜண்ட் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

 

இதனை நம்பி 19 பேரும் லட்சக்கணக்கான ரூபாயை அந்த ஏஜண்டிற்கு கொடுத்து உள்ளனர். தொடர்ந்து ஏஜண்ட் அபூபக்கர் கூறியபடி அனைவரும் விருத்தாசலம் ரயில் நிலையம் சென்றுள்ளனர். அங்கே ஏஜண்ட் வராததால் அவரை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறிய ஏஜண்ட் அபூபக்கர்,நீங்கள் முன்னே செல்லுங்கள், நான் பின்னால் வருகிறேன் என்று கூறியுள்ளார்.

 

இதனை நம்பி 19 பேரும் சென்னை விமான நிலையம் சென்றுள்ளனர். ஆனால் அங்கும் ஏஜண்ட் வரவில்லை. இவர்கள் செல்ல வேண்டிய விமானமும் புறப்பட்டு சென்றுவிட , அப்போது தான் அபூபக்கர் லட்சக்கணக்கான ரூபாயை வாங்கிக்கொண்டு ஏமாற்றியது தெரிய வந்தது.

 

இதனையடுத்து, சென்னையிலிருந்து நேரடியாக அபூபக்கரின் வீட்டிற்கு சென்ற அவர்கள் தங்கள் குடுத்த பணத்தை தரும்படி வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து அபூபக்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருத்தாசலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி அரங்கேறியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply