பிரதமர் மோடி இலங்கை,மாலத்தீவு நாடுகளில் சுற்று பயணம்!

பிரதமர் மோடி அடுத்த இரு நாட்களில் இரண்டு கோவில்களில் தரிசனம் செய்வதோடு இரு நாடுகளிலும் சுற்று பயணம் மேற்கொள்கிறார். இதில் அவர் மாலத்தீவு நாடாளுமன்றத்தில் சிறப்பு உரையும் ஆற்றுகிறார். பிரதமராக  மோடி இரண்டாவதாக பதவியேற்ற நிலையில் முதன் முதலாக மாலத்தீவுக்கும் அடுத்து இலங்கைக்கும் செல்ல உள்ளார்.  இந்த பயணத்தின்போதே இரு கோவில்களிலும் வேண்டுதல்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார்.  இதன்படி வெள்ளிக்கிழமை இரவு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்படும் மோடி கொச்சிக்கு வந்து சேருகிறார்.

 

இரவில் கொச்சியில் தங்கும் அவர் அங்கிருந்து சனிக்கிழமை இரவு ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் செல்கிறார். குருவாயூர்  ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் அவரது ஹெலிகாப்டர் இறங்குகிறது. அங்கிருந்து காரில் புறப்பட்டு குருவாயூர் கோவிலுக்கு புறப்பட்டு செல்லும் மோடி காலை 10 மணி முதல் 11.10 வரை சாமி தரிசனம் செய்கிறார்.

 

மஞ்சள் பட்டு, கதலிப்பழம் ஆகியவற்றை காணிக்கையாக படைத்து வழிபடும் மோடி பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்.எடைக்கு எடையாக தாமரைப்பூ மற்றும் கதலிப்பழங்களை அவர் கொடுக்கிறார். அதற்காக குமரிமாவட்டம்  தோவாளையிலுள்ள  பூ சந்தையிலிருந்து வாங்கப்பட்ட தாமரை பூக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  குருவாயூர் தரிசனம் முடிந்த பின்னர் மோடி மாலத்தீவுக்கு பயணம் ஆகிறார். சனிக்கிழமையன்று அங்கு செல்லும் பிரதமர் மோடி மாலத்தீவு அதிபர் இப்ராஹீம் சாலிக்குடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

 

இதன் பிறகு மாலத்தீவு நாடாளுமன்றத்திலும் உரை நிகழ்த்த உள்ளதாக மாலத்தீவுக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் கூறியுள்ளார்.  தற்போது மோடி மேற்கொள்ளும் பயணத்தின் போது இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  மாலத்தீவு சுற்று பயணத்திற்கு பின் 30 ஆம் தேதி பிரதமர் மோடி இலங்கை செல்கிறார், அங்கு அந்நாட்டு அதிபர் சிரிசேனா, ரனில் விக்ரமசிங் ஆகியோருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

 

மேலும் ஈஸ்டர் குண்டு வெடிப்பிற்க்கு பின்னர் இலங்கை செல்லும் அவர் முதல் வெளிநாட்டு தலைவர் என்ற வகையில் பயங்கரவாதத்திற்க்கு எதிராக போராடுவதற்க்கு இலங்கைக்கு துணை நிற்கும்  என்பதை வலியுறுத்தும் வகையில் பிரதமர் மோடியின் பயணம் அமையும் என்று வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே கூறியுள்ளார். இலங்கையில் சுற்று பயணத்தை முடித்த கையோடு பிரதமர் மோடி 9 ஆம் தேதியன்று திருப்பதிக்கு வருகிறார்.

 

கொழும்பு விமான நிலையத்திலிருந்து திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா விமானநிலையத்திற்க்கு வரும் அவர் அங்கிருந்து திருப்பதி செல்கிறார்.திருப்பதி வெங்கடேஷ் பெருமாள் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்து வழிபடுகிறார்.பின்னர் உடனே டெல்லி புறப்பட்டு செல்கிறார்.


Leave a Reply