ஆசிரியர் கழுத்தை அறுத்து கொடூர கொலை! மதம் மாறியதால் ஏற்பட்ட விபரீதம்

ராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்.இவரது மனைவி சண்முகப்ரியா.இவர்களுக்கு கல்லூரி பயிலும் ஒரு மகனும் பத்தாம் வகுப்பு படித்து வரும் ஒரு மகளும் உள்ளனர். மோகன்ராஜ் சலூன் கடை நடத்தி வருகிறார். சண்முகப்ரியா அருகே உள்ள ரோமன் கத்தோலிக்க சபைக்கு சொந்தமான பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் காலை சண்முகப்ரியா அவரது வீட்டின் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யபட்டு கிடந்தார். அவரது கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்க சங்கிலி மாயமானது.

 

அருகே நைலான் கயிறு கிடந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த ராமநாதபுரம் பஜார் காவல் துறையினர் சண்முகப்ரியாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சண்முகப்ரியாவின் கழுத்தில் அவரது வீட்டிலிருக்கும் துணி காயவைக்க பயன்படும் கயிறு சுற்றி இருந்ததால் காவல் துறையினர்க்கு சந்தேகம் எழுந்தது.மேலும் அவரது கழுத்திலுள்ள நகை மட்டும் மாயமான நிலையில் காதில் கிடந்த கம்மல், கையில் கிடந்த வளையல் மற்றும் காலில் கிடந்த கொலுசு போன்றவை அப்படியே இருந்ததால் அது நகைக்காக நிகழ்த்தபட்ட கொலையாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லையென முடிவுக்கு வந்தது காவல் துறை.

 

அதே நேரத்தில் மனைவியின் நடவடிக்கைகள் குறித்து முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்து காவலரை குழப்பிய அவரது கணவர் மோகன்ராஜை பிடித்து விசாரித்தபோது கொலைக்கான மர்மம் வெளிச்சத்திற்கு வந்தது. தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு பரபரப்பு வாக்குமூலம் அளித்தார் மோகன்ராஜ்.ஆசிரியை வேலை பார்ப்பது கிறித்துவ பள்ளி என்பதால் சண்முகப்ரியாவும் கிறிஸ்துவ மத போதனைகள் குறித்து பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் கிறிஸ்துவம் குறித்து கூற தொடங்கிய சண்முகப்ரியா கணவருக்கு தெரியாமல் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது.

 

இதனால் கணவன் மனைவிக்கிடையே கடுமையான தகராறு ஏற்படுகிறது. அதோடு நிற்காமல் தனது குழந்தைகளையும் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற முயன்றுள்ளார். இதனை தடுத்து மோகன்ராஜ் சண்முகப்ரியவை எச்சரித்துள்ளார். இதனால் ஒருவருக்கொருவர் அதிகம் பேசவில்லை என சொல்லப்படுகிறது. இதற்கிடையே சண்முகப்ரியா செல்போனில் தனது நண்பர்களிடம் இரவு வேளையில் நீண்ட நேரம் பேசுவது, வாட்சப்பில் தகவல் பரிமாறுவது பார்த்து கணவர் மோகன்ராஜ் கண்டித்துள்ளார். இதனால் கணவரிடமிருந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றார்.

 

அதுமட்டுமில்லாமல் கிறித்துவ மதத்திற்கு மாறி தனது இஷ்டப்படி வாழப்போவதாக கூறியுள்ளார் சண்முகப்ரியா. தனது மகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்வுகள் இருப்பதால் தேர்வு முடிந்து செல்லும்படி அறிவுரை வழங்கியுள்ளார். இதற்கிடையே ஞாயிற்று கிழமை நள்ளிரவு சண்முகப்ரியா தனது நண்பர்களுடன் வாட்சப் சாட்டிங்கில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி,மனைவியிடம் மதம் மாற ஒப்புக்கொண்டது போல நடித்த மோகன்ராஜ் வெளியில் சென்று நடந்துகொண்டு பேசலாம் என மனைவியை அழைத்துள்ளார்.அவரும் மோகன்ராஜின் பேச்சை நம்பி வெளியில் சென்றுள்ளார்.

 

மனைவியை முன்னால்விட்டு நடந்து சென்று மோகன்ராஜ் ஏற்கனவே தயார் நிலையில் வைத்திருந்த கயிறை வைத்து சண்முகப்ரியாவின் கழுத்தை இறுக்கியுள்ளார். அவர் மயங்கி சரிந்ததும் உயிர்பிழைத்துவிட கூடாது என்பதற்காக கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்ததாக சுட்டிக்காட்டுகிறார்கள் காவல் துறையினர்.


Leave a Reply