மருத்துவ மேற்படிப்பிற்கான சீட் வாங்கித்தருவதாக 70 லட்ச ரூபாய் மோசடி,இருவர் கைது!பேராசிரியர் தலைமறைவு!

திண்டுக்கல் மாவட்டம் எம்.வி.எம்.நகரை சேர்ந்தவர் நாகராஜன்.இவரது மகன் விஷ்ணுதரன் மருத்துவப்படிப்பான எம்.பி.பி.எஸ் படித்துள்ளார்.மேற்படிப்பான எம்.எஸ்.ஆர்த்தோ படிக்க முயற்சி மேற்கொண்டு வந்தார்.அப்பொழுது நாகராஜின் உறவினரான சஞ்சீவ் ராஜ் மூலம் அறிமுகமாகி உள்ளார் கோவை உப்பிலிப்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக்.

 

கார்த்திக் அண்ணாமலைப்பல்கலைக்கழக துணை வேந்தர் மூலம் கோவை சி.ஐ.டி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் சக்கரவர்த்தி மூலம் மருத்துவ மேற்படிப்பு படிக்க உதவி செய்வதாகவும்,அதற்கு 70 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் நம்பிக்கை உருவாகும் விதமாக பேசியுள்ளார்.

 

இதனை நம்பிய நாகராஜன் சக்கரவர்த்தியின் மனைவி சகுந்தலா தேவியின் வங்கிக்கணக்கில் 10 லட்ச ரூபாயும்,மீதம் உள்ள 60 லட்ச ரூபாயை சக்கரவர்த்தி மற்றும் கார்த்திக் ஆகியோரிடம் நேரிலும் கொடுத்துள்ளார்.

பணம் பெற்ற பின்னர் விரைவில் மருத்துவ மேற்படிப்பிற்காக அட்மிஷனை பெற்றுத்தருவதாக கூறியதோடு,அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் சீலுடன் கூடிய அட்மிஷன் ஆர்டரை கொடுத்துள்ளனர்.இதனை பெற்றுக்கொண்ட நாகராஜன் மற்றும் விஷ்ணுதரன் இருவரும் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திற்கு சென்று விசாரித்த பொழுது அந்த அட்மிஷன் ஆர்டர் போலியானது என தெரிய வந்துள்ளது.

 

அதனையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டதை அறிந்த நாகராஜன் மற்றும் விஷ்ணுதரன் இருவரும் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.இதனையடுத்து கோவை சிட்டி கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் பெருமாள் தலைமையிலான தனிப்படை களத்தில் இறங்கி விசாரணை மேற்கொண்டதில் மோசடி செய்தது அம்பலமானது.

 

அதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கார்த்திக் மற்றும் சக்கரவர்த்தியின் மனைவி சகுந்தலா தேவியை கைது செய்தனர்.தலைமறைவான பேராசிரியர் சக்கரவர்த்தியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.இச்சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply