பொள்ளாச்சி அருகே காட்டு யானை தாக்கி மேலும் ஒருவர் உயிரிழப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் தொடர்ந்து இரண்டு நாட்களாக யானை தாக்கியதில் இருவர் பலியானதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் நவமலைப்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் 50 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று இரவு மாகாளி என்ற முதியவர் வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டிருந்த போது அங்கு வந்த ஒற்றை காட்டு யானை தும்பிக்கையால் மாகாளியை பிடித்து தூக்கி வீசியது.

 

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.பின்னர், அங்குள்ள மக்கள் யானையை வனப்பகுதியில் விரட்டினர்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.கடந்த 3 மாதங்களாக இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியும் பொது மக்களை அச்சுறுத்தியும் வருகிறது.

 

இரவு முழுவதும் தூக்கம் விழித்து உயிருக்கு பயந்து வாழ்ந்து வருவதாகவும் இது குறித்து பலமுறை வனத்துறை மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இரண்டு உயிர்களை பலி வாங்கிய யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் தாயுடன் நடந்து சென்ற சிறுமி ரஞ்சனி யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.அடுத்தடுத்து யானை தாக்கி இரண்டு பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply