குன்னூர் பழக்கண்காட்சி நிறைவு !ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று துவங்கிய பழக்கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.

 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் ஆண்டு தோறும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பாக பழக்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.அதன் ஒரு பகுதியாக இந்தாண்டும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 61 வது பழக்கண்காட்சி நேற்று துவங்கியது.

இதில் பழ வகைகளை கொண்டு அமைக்கப்பட்ட மயில்,காய்கறிகள் மற்றும் பழ வகைகளை கொண்டு தேசிய கொடியில் உள்ள இந்தியாவின் லச்சினை,மாட்டு வண்டியில் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்கும் தம்பதி போன்ற விஷயங்கள் மக்களை அதிகம் கவர்ந்தன.இதன் முன்பு பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.நேற்று வரை சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பழக்கண்காட்சியினை கண்டு ரசித்தனர்.

 

மேலும்,பொதுமக்கள் கண்டுகளிக்கும் விதமாக ஆர்கெஸ்ட்ராவும் நடத்தப்பட்டது.நீலகிரி மாவட்டத்தின் தொன்மையான இனமான படுகர் பாடல்கள் இசைத்த பொழுது படுகர் இனத்தை சேர்ந்த இளைஞிகள்,சிறுவர்,சிறுமியர் தன்னையும் மறந்து இசைக்கேற்ப நடனமாடியது அனைவரின் கண்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

இறுதி நாளான இன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் பழக்கண்காட்சியினை காண கர்நாடகா,கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும்,வெளிநாடுகளில் இருந்தும் பொதுமக்கள் குடும்பத்தினருடன் திரண்டு வந்து பழக்கண்காட்சியினை கண்டு மகிழ்ந்தனர்.இன்று மாலையுடன் இந்த பழக்கண்காட்சி நிறைவு பெறுவதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பாதுகாப்புப்பணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.எனினும்,குடிநீர் உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை மாவட்ட நிர்வாகம் சரி வர செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.குறிப்பாக வயதானவர்கள் சென்று வர ஏதுவாக பக்கவாட்டில் கைப்பிடி மாதிரி அமைத்திருந்தால் தாங்கள் இந்த பழக்கண்காட்சியினை கண்டு ரசிக்க ஏதுவாக இருக்கும் என புலம்பியதை கண்கூடாக காண முடிந்தது.

நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,குழந்தைகளுக்கு 15 ரூபாயும்,கேமரா எடுத்து சென்றால் 50 ரூபாயும்,வீடியோ கேமரா எடுத்துச்சென்றால் 100 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கும் மாவட்ட நிர்வாகம் குடிநீர்,கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

நீலகிரி காவல் துறையினருக்கு ஒரு சபாஷ்…

 

கோடை விழாவினை கண்டு களிக்க கேரளா,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும்,அயல்நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது கார்களிலும்,வாடகை வாகனங்களில் வந்தும் கண்டு ரசித்து சென்றனர்.

 

அண்டை மாவட்டங்களான கோவை,திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் கார்,சுற்றுலா வாகனங்களிலும் பலர் வந்து சென்றனர்.

எனினும்,விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு டூவீலர்களில் சாலை மார்க்கமாக வருவோரிடம் நீதிமன்ற உத்தரவுப்படி ஹெல்மெட் இருந்தால் மட்டுமே மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் உள்ள பர்லியாறு சோதனைச்சாவடியில் அனுமதித்தனர்.ஹெல்மெட் இல்லாத அண்டை மாவட்ட மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான்.அதன் ஒரு பகுதியாக இன்று டூவீலரில் ஹெல்மெட் இல்லாமல் வந்த சுற்றுலா பயணிகளிடம் அங்கு பணியில் இருந்த வெலிங்க்டன் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் போலீஸ்காரன்னா என்ன இளிச்சவாயனா?,ஹெல்மெட் போடாம வர்றீங்களே உங்களுக்கு சூடு,சொறணை இருக்கா?,சோத்துல உப்ப போட்டுதான சாப்பிடறீங்க என்கிற தகாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார்.வெகு தூரத்தில் இருந்து உதகை கோடை விழாவினை காண ஆர்வத்துடன் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 

காவல்துறையில் பல கண்ணியமிக்க காவல்துறையினர் இருக்கையில் இது போன்ற காவலர்களின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் காவல் துறையின் மீது வைத்திருக்கும் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் உள்ளது.நீலகிரி மாவட்ட காவல்துறை இது போன்ற சீசன் காலங்களிலாவது இது போன்ற அதிகாரிகளை பணியில் அமர்த்தாமல் இருப்பது நல்லது.

சீசன் சமயங்களில் இதனை நீலகிரி மாவட்ட காவல் துறை கண்டுகொள்ளுமா..? இல்லையென்றால் அடுத்த சீசனுக்கு வரும் மக்களின் வருகை இது போன்ற காவலர்களினால் குறையும் என்பதே அனைவரின் கருத்து.மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் பர்லியாறு காவல் உதவி ஆய்வாளரின் இந்த நடவடிக்கை பொது மக்களை அவதிக்குள்ளாக்கி உள்ளது.


Leave a Reply