விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – கோவை கலெக்டர் எச்சரிக்கை!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆண்டு தோறும் நீதிமன்ற உத்திரவுபடி கூட்டாய்வு நடத்தப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகம் மற்றும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு இன்று துவங்கியது. மாவட்ட கலெக்டர் இராசாமணி இந்த ஆய்வினை இன்று நேரில் பார்வையிட்டார்.

 

கோவை மாவட்டத்தில் உள்ள 340 பள்ளிகளின் வாகனங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த ஆய்வினை பார்வையிட்ட பின்னர் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது,
பள்ளி வாகனங்களில் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது எனவும், இன்று துவங்கும் இந்த ஆய்வு ஜூன் முதல் வாரத்திற்குள் முடிவு பெறும் எனவும் தெரிவித்தார்.

 

கோவை மாநகரில் உள்ள 221 பள்ளிகளின் 1172 வாகனங்கள் இங்கு ஆய்விற்கு உட்படுத்தப்படும் என தெரிவித்த ஆட்சியர், பள்ளி வாகனங்களில் பிரேக், இன்ஜின் ஆகியவற்றின் தரம், வாகன படிக்கட்டுகளின் உயரம், அவசர கால வழிகள் முறையாக இயங்குகின்றதா என்பன உட்பட பல ஆய்வுகளுக்கு பின்னர் பள்ளி வாகனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும்,தனியார் பள்ளிகளில் ஒப்பந்தம் அடிப்படையில் தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டாலும், பள்ளி வாகனங்களுக்கென விதிக்கப்பட்ட நிறம் உட்பட்ட அனைத்து விதிகளும் பொருந்தும் எனவும், விதிகளை மீறி பள்ளி வாகனங்கள் இயக்கும் பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

அதிக வேகத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதாக வரும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அரசு பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளின் வேகம் குறித்து தணிக்கை செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் இராசாமணி தெரிவித்தார்.

 

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் டெய்சி குமார்,வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள் குமாரவேலு,பால்ராஜ்,ராஜு,பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Leave a Reply