இ-சலான்களை சரிபார்க்க இன்று முதல் சிறப்பு மையங்கள்..!
சென்னையில் சாலை விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு கண்காணிப்பு கேமரா மூலம் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து பல வாகன ஓட்டிகளுக்கு தெரியாததால் பல கோடி ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், நிலுவையில் உள்ள அபராதங்கள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு தகவல் தெரிவித்து, அபராதத் தொகையை வசூலிக்க சிறப்பு அழைப்பு மையங்களை போக்குவரத்து காவல் துறை அமைத்துள்ளது. அதன்படி, அயனாவரம், ராயப்பேட்டை, அண்ணா நகர், மதுரவாயல், வண்ணாரப்பேட்டை, மாம்பலம் உள்ளிட்ட 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்கள் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை செயல்படும்.
இந்த மையங்களில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நிலுவையில் உள்ள அபராதம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு தொலைபேசி அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் காவல் துறையினர் தெரிவிப்பார்கள் எனவும், வாகன ஓட்டிகள் நிலுவையில் உள்ள சலான்களை சரிபார்த்து ஆன்லைன் போர்ட்டல்கள், பேடிஎம், தபால் நிலையங்கள் மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் செலுத்த ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும் என்றும் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




