ஐபிஎல் தொடரில் ஏமாற்றத்துடன் வெளியேறிய ஐதராபாத்! நாளை சென்னை-டெல்லி அணிகள் மோதல்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Special Arrangements


ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்று போட்டியில், டெல்லியிடம் தோல்வி அடைந்து, ஏமாற்றத்துடன் ஐதராபாத் அணி வெளியேறியது.

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றுப்போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

 

‘டாஸ்’ வென்ற டெல்லி அணி, ஐதராபாத்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி, ஐதராபாத் அணி விளையாடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

 

விருத்திமான் சஹா 8 ரன்னுக்கு வெளியேற, மார்ட்டின் கப்தில் 36 ரன்கள் எடுத்தார். மனிஷ் பாண்டே 30, கேன் வில்லியம்சன் 28, விஜய் சங்கர் 25, முகமது நபி 20 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

 

அடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் நல்ல தொடக்கம் தந்தனர். அணியின் ஸ்கோர் 66 ரன்னாக இருந்த போது ஷிகர் தவான் (17 ரன்) ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், 8 ரன்களுக்கு வெளியேறினார்.

 

அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 38 பந்துகளில், 56 ரன்கள் எடுத்தார். சிறப்பாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்ற ரிஷாப் பான்ட் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் 4ஆவது பந்தில் அமித் மிஸ்ரா ரன்-அவுட் ஆனதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

 

எனினும், அடுத்த பந்தை கீமோ பால், பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார். 19.5 ஓவரில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கிறது.

 

விசாகப்பட்டினத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, வரும் 12இல் ஐதராபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும்.


Leave a Reply