பொள்ளாச்சியில், கஞ்சா மற்றும் மதுபான போதையில் விடிய விடிய ஆட்டம் போட்ட கேரள வாலிபர்கள் 150 பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால், பலரும் குளுகுளு பிரதேசங்களுக்கு செல்வது வாடிக்கை. இன்னும் சிலர் மது விருந்துகளில் திளைத்து, உல்லாசமாக இருந்து, வழக்கமான இயந்திர வாழ்க்கையை மறந்து இருப்பார்கள்.
கோவையில் படித்து வரும் கேரள மாணவர்கள் ஒரு கூட்டமாக, நேற்று பொள்ளாச்சிக்கு சென்று உற்சாகமாக அங்கு செலவிட தீர்மானித்தனர். அதன்படி, பொள்ளாச்சி சேத்துமடை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்தனர்.
இந்த விருந்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும், மதுவும், அசைவ உணவுகளும் இடம் பெற்றன. சொகுசு கார்கள், விலையுயர்ந்த பைக்குகளில் மாணவர்கள் விருந்துக்கு வந்தனார். நேரம் செல்லச்செல்ல, போதை தலைகேறிய நிலையில் மாணவர்கள் ஆட்டம், பாட்டம் என்று கூத்தடிக்க தொடங்கினர். விடிய விடிய இவ்வாறு கூச்சலிட்டதோடு, ஒருவருக்கொருவர் ரகளையிலும் ஈடுபட்டனர்.
இதனால் பொறுமையிழந்த அக்கம்பக்கத்தினர், ஆனைமலை காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, எஸ்.பி சுஜித்குமார் தலைமையிலான போலீசார், அந்த தோட்டத்தில் ஆய்வு செய்தனர். அங்கு மது, போதைப்பொருட்களை பயன்படுத்தியதையும், தகராறு நடந்ததையும் உறுதி செய்தனர்.
இதையடுத்து, கேரள மாணவர்கள் ஏறத்தாழ 150 பேரையும் கூண்டோடு கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அனுமதியின்றி ரிசார்ட் போல செயல்பட்டதற்காக, அதன் உரிமையாளர் கணேஷ் உட்பட ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவை அடுத்து சொகுசு விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.
பாலியல் புகாரில் சிக்கி இன்னும் அதிலிருந்து மீளாத நிலையில், பொள்ளாச்சியில் மது விருந்து நடத்தி மாணவர்கள் கைதானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.