கோவையில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தின் காசாளர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். வருமான வரித்துறையினர் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது அதிகாரிகளிடம் ரகசியங்களை சொல்லியதால் இறப்பு நேரிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கோவை துடியலூர் ஜி.என். மில் அருகே உள்ள உருமாண்டாம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் பழனிசாமி(45); இவருக்கு சாந்தாமணி( 38) என்ற மனைவியும், பள்ளியில் படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். பழனிசாமி, ஜி.என்.மில் அருகே உள்ள மார்ட்டினின் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட்டில், 25 வருடங்களாக காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த 30ஆம் தேதி, மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள்,வீடுகள், ரிசார்ட்டுகளில் என 70 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கோவை மாவட்டத்தில் மட்டும், 22 இடங்களில் சோதனை நடைபெற்றது. மார்ட்டின் நிறுவனங்களில் பணிபுரியும் நிர்வாகத்தினர், முக்கிய நபர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக காசாளர் பழனிசாமியிடம், வருமான வரித்துறையில் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகளின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறியதாகவும், தனது கையை அறுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவரை, வருமான வரித்துறை அதிகாரிகள் துடியலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் எதிரே உள்ள குட்டையில், காசாளர் பழனிசாமியை, காரமடை போலீசார் சடலமாக கண்டெடுத்தனர்.
வருமான வரித்துறையினர், விசாரணையில் இருந்து அவரை விடுவித்த நிலையில் காசாளர் பழனிசாமி சடலமாக கண்டெடுக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரமடை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு, சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.
வருமான வரித்துறையினரின் விசாரணைக்கு பயந்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வருமான வரித்துறையில் ரகசியங்கள் கசியவிட்டிருக்கலாம் என்று கருதி, அவரை யாராவது கொலை செய்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உடற்கூறு ஆய்வுக்கு பிறகும், போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகுமே இதில் உள்ள மர்மங்கள் விலகும்.