‘இன்னாள்’ வேலுமணியா? ‘முன்னாள்’ வேலுச்சாமியா? கோவை அதிமுகவில் தொடரும் பனிப்போர்!

அதிமுக தலைமை மீது செ.ம. வேலுச்சாமி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அதுபற்றி கேள்விக்கு பதிலளிக்க வந்த வேட்பாளரை, அமைச்சர் வேலுமணி தடுத்தார். இது, இருவரிடையே பனிப்போர் இன்னமும் தொடர்வதையே காட்டுகிறது.

 

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த கனகராஜ் மரணமடைந்ததால், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளோடு சேர்த்து, அங்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

 

அ.தி.மு.க சார்பில், காலஞ்சென்ற எம்.எல்.ஏ. கனகராஜின் சித்தப்பா மகன் கந்தசாமி நிறுத்தப்பட்டுள்ளார். தி.மு.க வேட்பாளராக பொங்கலூர் பழனிச்சாமி, அ.ம.மு.க வேட்பாளராக முன்னாள் எம்பி சுகுமார், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மயில்சாமி, நாம் தமிழர் கட்சியின் விஜயராகவன் உள்ளிட்டோர் சூலூரில் போட்டியிடுகின்றனர்.

 

அதிமுக சார்பில் சூலூரில் போட்டியிட, முன்னாள் அமைச்சரும், கோவை முன்னாள் மேயருமான செ.ம. வேலுச்சாமி விருப்பப்பட்டார். ஆனால், கோவையில் தன் கண் அசைவின்றி அதிமுகவில் எதுவும் நடக்கக்கூடாது என்று நினைக்கும் அமைச்சர் வேலுமணி, மீண்டும் வேலுச்சாமி தலை தூக்காமல் இருக்க, அவருக்கு சீட் வழங்கக்கூடாது என்று, எடப்பாடியிடம் பிடிவாதமாக இருந்து, அதில் வெற்றியும் பெற்றார்.

 

இதனால் அதிருப்தியின் உச்சத்திற்கு சென்ற வேலுச்சாமியை, கட்சித் தலைமை சமாதானம் செய்தாலும், அவர் இன்னும் நீரு பூத்த நெருப்பாக, உள்ளுக்குள் சீற்றத்துடன் தான் இருக்கிறார். சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் போது வேலுமணி தரப்பினருக்கு பதிலடி தர, அவர் காத்திருப்பதாகவும், இதற்காக, மேல்மட்ட அமமுகவினர் சிலருடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் கூட ஒரு பேச்சு நிலவுகிறது.

கோவை முன்னாள் மேயர் வேலுச்சாமி

இருவருக்கும் இடையே பனிப்போர் இருப்பது வேட்புமனு தாக்கலின் போதும் வெளிச்சத்துக்கு வந்தது. மனு தாக்கலின் போது, அதிமுக வேட்பாளர் கந்தசாமி, மேளதாளம் முழங்க,பட்டாசு வெடித்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியோடு ஊர்வலம் வந்தார்.

 

மனு தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கந்தசாமி, முதல்வர், துணை முதல்வர் கொண்டு வந்த அத்தனை திட்டங்களையும் இந்ததொகுதியில் நிறைவேற்றப் பாடுபடுவேன் என்றார்.

 

அப்போது செய்தியாளர் ஒருவர், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமிக்கு சீட் கொடுக்காதது பற்றி குறிப்பிட்டு, அதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்களே என்று கேட்டார்.

 

அமைச்சர் வேலுமணி

இதை கேட்டததுதான் தாமதம், அமைச்சர் வேலுமணியின் முகம் சுருங்கியது. இந்த கேள்விக்கு பதிலடிக்க முயன்ற வேட்பாளர் கந்தசாமியை பேசவிடாமல் தடுத்த வேலுமணி, “அதெல்லாம் ஒன்றுமில்லை. அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெறுவோம்” என்று பளிச்சென்று கூறிவிட்டு, அவசர அவசரமாக, பேட்டியை முடிக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.

 

வேலுச்சாமி பற்றி பேச்சை எடுத்ததும் அமைச்சர் வேலுமணி டென்ஷன் ஆனது, அவர்கள் இருவருக்கும் இடையே பனிப்போர் இன்னமும் தொடர்வதை காட்டுவதாக உள்ளது. இது தேர்தல் வெற்றியை பாதிக்குமா என்று, அதிமுக தொண்டர்கள் கவலையில் உள்ளனர்.


Leave a Reply