எடப்பாடி ஆட்சிக்கு நாள் குறித்துவிட்டாரா ஸ்டாலின்? அதிமுக எம்எல்ஏ-க்களுடன் பேரம் என்ற தகவலால் பரபர!

தேர்தல் முடிவு வெளியானதும், சூட்டோடு சூடாக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் மு.க. ஸ்டாலின் காய் நகர்ச்சி வருவதாக, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்காக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு, அவர் வலைவீசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

மக்களவை தேர்தல் முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியாகிறது. மத்தியில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பதில் இன்னமும் தெளிவற்ற போக்கு நிலவுகிறது. ஆனால், தமிழகத்தை பொருத்தவரை, திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகளும் கூறுகின்றன.

 

தமிழகத்தில் மக்களவை தேர்தலைவிட, 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தான் பலராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இந்த முடிவில் தான், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசின் ஆயுள் இருக்கிறது.

 

 

இடைத்தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் திமுகவுக்கு சாதகமாகவே இருக்கும் என்று நம்பும் அதன் தலைவர் ஸ்டாலின், எப்படியும் அரியணையில் அமர்ந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

 

சட்டசபையில் திமுகவுக்கு தற்போது 88 எம்.எல்.ஏ.,க்களும், கூட்டணி கட்சியினரையும் சேர்த்து 97 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. ஆட்சி அமைக்க திமுகவிற்கு 117 எம்எல்ஏக்கள் தேவை என்ற சூழலில், இடைத்தேர்தலில் 20 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றால், ஆட்சிக்கனவு நனவாகும் என்று, ஸ்டாலின் நம்புகிறார்.

 

இதில் சற்று கூட அல்லது குறையலாம் என்பதால், இப்போதே அதிமுக எம்எல்ஏக்கள் சிலருடன் திமுக தரப்பு பேரம் பேசுவதாகவும் கூறப்படுகிறது. அதிமுக எம்எல்ஏ-க்கள் பத்துக்கும் மேற்பட்டோர், திமுக தரப்புடன் தொடர்பில் இருப்பதாக, அரசியல் வட்டாரங்களில் பேச்சு உலவுகிறது.

 

 

அதேநேரம், திமுகவுக்கு தாவினால், கட்சித் தாவல் தடை சட்டத்தில் எம்.எல்.ஏ. பதவியை இழக்க நேரிடலாம் என்பதால், அவர்கள் மத்தியில் ஒருவித தயக்கம் நிலவுகிறது.

 

எனவே, மத்தியில் யார் கை ஓங்கும் என்பதை பொருத்திருந்து பார்த்து, அதன் பிறகு திமுகவிற்கு சிக்னல் கொடுக்கலாம் என்று அந்த எம்.எல்.ஏ.க்கள் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

எது எப்படியானாலும், துரைமுருகன் கூறியபடி 25 நாட்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்குமா? அல்லது ஸ்டாலின் கனவில் மண்ணை தூவி எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை தொடர்வாரா என்பதற்கு, நாமெல்லாம் மே 23 வரை காத்திருக்க வேண்டும். எனவே, தேர்தல் முடிவு வெளியான பிறகு தான், தமிழக அரசியல் களம் இன்னும் பரபரப்பாகும் என்பது மட்டும் உறுதி.


Leave a Reply