தனியாருக்கு சொந்தமான நகை அடகு கடை ஊழியர்களை தாக்கி 812 சவரன் நகை,1 லட்சம் பணம் கொள்ளை.ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை திருச்சி சாலையில் உள்ள முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தில் சுமார் 812 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை முகமூடி அணிந்த நபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக நிறுவன பெண் ஊழியர்கள் இருவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை திருச்சி சாலை ராமநாதபுரம் பகுதிகளில் முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனமானது செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்று பிற்பகல் பணியில் இருந்த ரேணுகா மற்றும் திவ்யா என்ற இரண்டு பெண் ஊழியர்களை முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் தாக்கி அங்கிருந்து சுமார் 812 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதாக அப்பெண்கள் தங்கள் நிறுவன நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இன்று காலை அந்நிறுவனம் சார்பில் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது வெளியாட்களாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தாக்கப்பட்டதாக கூறிய இரண்டு பெண் ஊழியர்களையும் காவல்துறையினர் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண்களே நகையை கொள்ளையடித்து மர்ம நபர் கொள்ளையடித்ததாக நாடகமாடுவதாக கூறும் காவல்துறையினர் இருவரிடமும் குறுக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.