குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் மேலும் 3 பெண்கள் கைது! 20 குழந்தைகள் மாயமானது ஆய்வில் உறுதியானது

ராசிபுரம், குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய மேலும் 3 பெண்களை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்; இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மாயமாகி இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

தமிழகத்தையே தற்போது உலுக்கி வருகிறது, ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரம். பெண் செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற அமுதவள்ளி, 50, தருமபுரி சதீஷ்குமார் என்பவரிடம் குழந்தையை விற்பனை பற்றி பேசிய ‘வாட்ஸ்-அப் ஆடியோ’ வெளியான பிறகே, இது வெளிச்சத்துக்கு வந்தது.

 

பிறந்த குழந்தைகளை, தொண்டு நிறுவனங்கள், சில மருத்துவமனைகளில் இருந்து வாங்கி, ஆண் குழந்தையை ரூ. 4 லட்சம், பெண் குழந்தை எனில் ரூ. 3 லட்சத்திற்கு விற்று வந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள், அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். மேலும், இந்த விவகாரத்தை ஆராய, ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

 

புகாரை தொடர்ந்து அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை விசாரித்து அதன் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். மேலும், கொல்லிமலை பகுதியில் சுகாதாரத்துறை ஆய்வு நடத்தினர். இதில், அப்பகுதியில் 20 குழந்தைகள் மாயமாகி உள்ளது தெரிய வந்துள்ளது.

 

மறுபுறம், குழந்தைகள் விற்பனை தொடர்பாக திருச்செங்கோடு, குமாரபாளையம், பவானி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. அதன் முடிவில், 3 பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

இவ்விவகாரத்தில், கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், ஈரோட்டை சேர்ந்த செவிலியர் பர்வின் உட்பட, இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 10 குழந்தைகளை வாங்கி அமுதாவிடம் கொடுத்ததாக, டிரைவர் முருகேசன் போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுகின்றனர்.


Leave a Reply