கருமத்தம்பட்டியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது,கட்சி நிர்வாகி ஒருவர் பேசும் பொழுது தங்களுடைய கூட்டணியில் சூலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கலின் போதும்,பிரச்சாரத்தின் போதும் தங்களது கட்சி நிர்வாகிகளை அழைக்கவில்லை எனவும்,சுய கெளரவத்தை விட்டு தேர்தல் பணிபுரிய முடியாது எனவும் குற்றம் சாட்டி பேசினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், தமிழக காங்கிரஸின் மேலிடப்பிரதிநிதியுமான சஞ்சய் தத் ” தங்களது உணர்வுகள் மதிக்கப்படும், தங்களுக்குள் என்ன பிரச்சினை என்றாலும் அதனை கருத்தில் கொள்ளாமல் கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய வேண்டும் எனவும்,தங்களது கூட்டணியிலேயே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் அறிவித்தது திமுக தலைவர் ஸ்டாலின் தான்,அதைப்போல் கூட்டணியில் ஸ்டாலினை தமிழக முதல்வர் வேட்பாளராக ராகுல் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

 

அதனால் தங்களுக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதனை மறந்து திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை வெற்றி பெற செய்ய திட்டமிட்டு ராகுலை பிரதமராகவும்,ஸ்டாலினை தமிழக முதல்வராகவும் செய்ய பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.இதனால் கூட்டத்தில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.கூட்டத்தில் கோவை மாநகர முன்னாள் மேயர் வெங்கடாச்சலம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply