அமைச்சர்களே எங்களின் சிலீப்பர் செல் தான்! விரைவில் ஆட்சி எங்கள் வசம்:வெற்றிவேல் தடாலடி

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் சிலரே எங்களது சிலீப்பர் செல்களாக உள்ளனர் என்று டிடிவி தினகரன் தரப்பை சேர்ந்த வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

 

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தரப்பினருடன், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி பிரபு, விருதாச்சலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்னசபாபதி ஆகியோர் நெருக்கமாக இருந்தனர்.

 

அவர்கள் மூவர் மீதும் கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, சபாநாயகர் தனபாலை நேற்று சந்தித்து, அதிமுக கொறடா கோரிக்கை விடுத்தார். இதனால், அவர்களின் பதவி பறிக்கப்படும் அபாயம் உள்ளது.

 

இந்த நிலையில் டிடிவி தினகரனை, அவரது கட்சியின் வெற்றிவேல் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். தேர்தல் முடிவுக்கு பிந்தைய நிலை, 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் விவகாரம் உள்ளிட்டவை குறித்து இதில் விவாதித்ததாக தெரிகிறது. அதன் பிறகு சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

 

சபாநாயகர், மூன்று எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தால் கூட, நீதிமன்றத்திற்கு நாங்கள் செல்ல மாட்டோம். நீதிமன்றத்தை நாடாமல் தேர்தலை சந்திக்க அ.ம.மு.க. தயாராக உள்ளது. எங்களது சிலீப்பர் செல்கள் அதிமுகவில் நிறைய பேர் இருக்கிறார்கள்.

 

தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இருக்கும். 22 எம்.எல்.ஏ.க்களை வைத்து, ஆட்சியை நாங்கள் பிடிப்போம். காரணம், அதிமுகவில் பல எம்.எல்.ஏ.க்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். ஏன், அமைச்சர்கள் சிலர் கூட எங்களது சிலீப்பர் செல்கள் தான் என்றார்.

 

வெற்றிவேலின் இந்த பேட்டி, அதிமுக வட்டாரத்தில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Reply