ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடந்த பெங்களூருவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில், கேப்டன் தோனி தனி ஒருவனாக போராடியும், சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
தற்போது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு நடந்த ஐபிஎல் 39வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது.
அடுத்து விளையாடிய சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் ஷேன் வாட்சன் (5 ரன்), அடுத்து வந்த துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா (0) இருவரின் விக்கெட்டை, ஸ்டெயின் கைப்பற்றினார்.
பிளிஸ்சிஸ் (5 ரன்), கேதர் ஜாதவ் (9 ரன்) என, அடுத்தடுத்து வந்தவர்கள் வெளியேற 28 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை தடுமாறியது.
இக்கட்டான நேரத்தில் தோனியும், அம்பத்தி ராயுடும் இணைந்து சரிவில் இருந்துஅணியை மீட்க போராடினர். அம்பத்தி ராயுடு 29 ரன், ஜடேஜா 11 ரன், பிராவோ 5 ரன் என்று எல்லோரும் வந்த வேகத்தில வெளியேற தோனி மட்டும் தனி நபராக போராடி, அணியின் வெற்றிக்கு கடுமையாக போராடினார்.
கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. தோனி சிக்ஸர் வீச சென்னை வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது.
எனினும் கடைசி பந்தில் சென்னை அணிக்கு 2 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், சென்னை அணி ரன் ரன் அவுட் முறையில் விக்கெட் இழக்க, ஒரு ரன்னில் தோல்வியடைந்தது. தோனி 84 ரன்களுடன் (48 பந்து, 5 பவுண்டரி, 7 சிக்சர்) களத்தில் இருந்தார். சென்னை அணிக்கு இது 3ஆவது தோல்வியாகும்.