கோவை மாநகரில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்!

கோவை மாநகரத்தில் 100 வார்டுகள் உள்ளன. அதில் கிட்டத்தட்ட 72 வார்டுகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் அதில் 35 வார்டுகளில் நிலநடுக்கம் ஏற்பட பெரும் வாய்ப்புகள் உள்ளதாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியின் போது,
தேசிய பேரிடர் மீட்புப் படை துணை கமாண்டன்ட் ராஜன் பாலு தெரிவித்தார்.

கோவை மாநகரில் பெரும் ஆபத்து நிறைந்த நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக 35 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. செல்வபுரம், பி.என்.புதூர், வஉசி நகர் , தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், செல்வபுரம் தெற்கு, உக்கடம், டவுன்ஹால், சாய்பாபா காலனி ,ஆர்.எஸ் புரம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

நிலநடுக்கம் ஏற்படக் கூடிய
வாய்ப்புகள் உள்ள நகரங்களின் பட்டியலில் கோவை மாநகரம் உள்ளது. ஏற்கனவே 1900 ம் ஆண்டில் கோவை மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் இருந்த பாலக்காட்டில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அப்போது கோவையில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் தாக்கத்தை 500 கிமீ அப்பால் இருக்கும் சென்னை முதல் திருநெல்வேலி வரை உணர முடிந்தது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியில் அதிவிரைவு படை ,கோவை மாவட்ட ஊர்க்காவல் படை, வனத்துறை, தீயணைப்பு துறை , தமிழ்நாடு சிறப்பு காவல் படை , செஞ்சிலுவை சங்கம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் , நிலநடுக்கம் ஏற்படும் போது எவ்வாறு தற்காத்துக் கொள்வது என செயல்விளக்கம் அளித்தனர்.


தேசிய பேரிடர் மீட்புப் படையின் மூத்த கமாண்டன்ட் ரேகா நம்பியார் கூறுகையில், தேசிய பேரிடர் மீட்பு படையானது இயற்கைச் சீற்றம் மற்றும் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட அனைத்து பயிற்சிகளையும் சிறப்பாக பெற்றுள்ளது என தெரிவித்தார். மேலும் கோவை மாநகரில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்றார். சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே அது போன்ற ஒரு நிகழ்வு அல்லது நிலநடுக்கம் கோவையில் ஏற்பட்டால் அதை எவ்வாறு சமாளிப்பது என்றும் அந்த நேரத்தில் எதைச் செய்ய எதைச் செய்யக்கூடாது என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் கோவையில் உள்ள பேரிடர் மேலாண்மை துறை சார்ந்த அமைப்புகளை ஒருங்கிணைத்து பாதுகாப்பு மீட்பு பணி, மருத்துவ உதவி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது என தெரிவித்தார்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் சார்பாக நிலநடுக்கம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்பு கொண்டனர் . உடனே பல்கலைக்கழக நிர்வாகம் , மாணவர்களுக்கு நிலநடுக்கம் சார்ந்த பேரிடர்கள் ஏற்படும்போது எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையில் உள்ள பேரிடர் மேலாண்மை துறை சார்ந்த அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து பேரிடர் விபத்து மீட்பு, முதலுதவி, மருத்துவ உதவி ஒத்திகை நடத்தப்பட்டதாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் தெரிவித்தார்.

மேலும் கோவை மாவட்ட ஊர்க்காவல் படை பிரதேச தளபதி பாலாஜி ராஜு கூறுகையில், பேரிடர் மீட்புப் பணிகளில் ஊர்க்காவல் படையினரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது மேலும் ஊர்க்காவல் படையினரை இதுபோன்ற மீட்பு பணிகளில் சிறப்பாக பயிற்சி அளித்து வைத்திருக்கையில் ஏதேனும் பேரிடர் ஏற்பட்டால் தேசிய பேரிடர் மீட்பு படை வருவதற்கு முன்னதாக விரைந்து விபத்து மீட்பு பணிகளில் ஈடுபட முடியும் என்றார். மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உரிய அனுமதி பெற்று தேசிய பேரிடர் மீட்பு படையின் மூலமாக கோவை மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கு பிரத்தியேகப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். இதுபோன்று வன வனப்பகுதிகளில் சமீப காலமாக கோடைப் பருவத்தில் ஏற்படும் வனத்தீயை கட்டுபடுத்த வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையுடன் இணைந்து ஊர்க்காவல் படையினர் ஈடுபட உரிய பயிற்சிகள் அளிக்கப்படும் என்றார்.


Leave a Reply