தமிழகத்தில் இன்று 106 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 1075 ஆனது..!! திருப்பூரில் ஒரே நாளில் 35 பேருக்கு பாதிப்பு!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 106 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் திருப்பூரில் மட்டும் அதிகபட்சமாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று வரை 969 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, உயிரிழப்பும் 10 ஆக இருந்தது. இந்நிலையில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 969 லிருந்து 1075 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா காரணமாக தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 11 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அறிகுறியுடன் 39,041 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும்,162 பேர் அரசு முகாம்களிலும் உள்ளனர்.
58,189 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 10,655 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் 1075 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 8 மருத்துவர்களும் அடங்குவர்.
தமிழகத்தில் தற்போது துரித கொரோனா பரிசோதனை செய்ய போதிய கருவிகள் உள்ளன. தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வோருக்கான கட்டணச் செலவை தமிழக அரசே ஏற்கும் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் திருப்பூரில் அதிகபட்சமாக 35 பேரும், கோவையில் 22 பேரும், சென்னையில் 18 பேரும் அடங்குவர் எனவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
திருப்பூரில் ஏற்கனவே 25 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 35 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. பின்னலாடை தொழிலில் இந்தியாவில் முதன்மை நகரமான திருப்பூருக்கு வெளிநாட்டு பிரதிநிதி கள் பலரும் அடிக்கடி வருகை தருவது வழக்கம்.
இதேபோல் திருப்பூர் தொழில் அதிபர்களும், உயர் நிர்வாகிகளும் வெளிநாட்டுப் பயணம் செய்வது சகஜம். அது மட்டுமின்றி திருப்பூரில் வெளிமாநில தொழிலாளர்களும் ஆயிரக்கணக்கில் பணியாற்றி வந்தனர். இதனால் கொரோனா பாதிப்பும் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் திருப்பூர் வாசிகள் உறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமின்றி திருப்பூரைச் சுற்றியுள்ள கோவையில் 119 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 64 பேரும் பாதிக்கப்பட்டு, சென்னைக்கு அடுத்தபடியாக, இந்த மாவட்டங்களும் 2, 3, 4 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளதால் கொங்கு மண்டலமே கொரோனா அச்சத்தில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.






