மகளிர் உரிமைத் தொகை திட்டம்: புதிய பயனாளர்களை இணைக்க தமிழக அரசின் திட்டம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டு காலமாக புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படாமல் உள்ள நிலையில் எப்போது வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ளார்.
கூட்டுறவுத் துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. அதில்கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பெரிய கருப்பன் இந்த ஆண்டு வழங்கப்பட்ட விவசாயக் கடன், சுய உதவிக்குழு கடன், டாப்செட்கோ கடன், டாம்கோ கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், தாட்கோ கடன், சிறு வணிக கடன் ஆகியவை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
பாரத் அரிசி, பாரத் ஆட்டா, குறைந்த விலை மளிகைப் பொருட்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அதுபோல், தமிழக அரசுக்கும் திட்டம் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “சில நேரங்களில் மத்திய அரசும் அத்தியாவசியப் பொருட்களை தருவார்கள். அது உணவுத் துறையின் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவுத் துறைக்கு வழங்கப்படும். இதுபோன்ற முடிவுகள் உணவுத் துறையின் மூலமாக எடுக்கப்படும்” என்று கூறினார்.
தற்போதும் ஆய்வு செய்து அவசியம் கருதி புதிய அட்டைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் கூறியது புதிய அட்டைகளை எதிர்பார்த்திருப்பவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படுவதோடு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும் வழி ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கைகள் வைத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மேலும் சில லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஏதிர்பார்த்திருக்கும் நிலையில் தமிழக அரசு அது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.





