தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை தொடருமா…!
தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் உடைய வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொது முடக்கம் அமலில் இருப்பதால் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144 இன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூட கூடாது என்ற நடைமுறை தொடர்கிறது.
கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறையின்படி எவ்வித தளர்வும் இன்றி பொது முடக்கம் முழுமையாக தொடரும் என்றும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரிய ஊக்குவிப்பதோடு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ரயில் மற்றும் விமான போக்குவரத்தை பொருத்தவரை தற்போது நிலையே தொடரும் என கூறப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போது, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கும் முறையாக இ பாஸ் பெற வேண்டும் என்ற நடைமுறை தொடர்கிறது.
ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள 10,000 ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்கள், தேவாலயங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியுடன் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சுதந்திர தின விழா கொண்டாடப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.






