அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 2 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை..!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 13 கல்லூரிகளில் 5 சதவீத மாணவர்கள் கூட தேர்ச்சி அடையாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் 2019 ஆம் ஆண்டுக்கான தேர்ச்சி விகித விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
3 அண்ணா பல்கலைக்கழக வளாகங்கள், 38 தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள், 480 இணைப்புக் கல்லூரிகளில் தேர்ச்சி விகிதங்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 521 பொறியியல் கல்லூரிகளில் இரண்டு கல்லூரிகள் மட்டுமே 90 சதவீதத்திற்கும் அதிகமான தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக 3 வளாகங்களில் தேர்ச்சி விகிதம் 70 முதல் 74 சதவீதம் வரை உள்ளது. 38 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி விகிதத்தை மாணவர்கள் பெற்றிருக்கின்றனர். அவற்றுள் 13 கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவு. இரண்டு கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
பொறியியல் கல்லூரிக்கான விண்ணப்ப பதிவு நடைபெற்று வரும் நிலையில் தேர்ச்சி விகித விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.






