பழங்கால கல்வெட்டுகள் படிமம் எடுக்கும் வசதியை சென்னையில் ஏன் ஏற்படுத்த கூடாது?
மைசூரில் இருப்பதைப்போல் பழங்கால கல்வெட்டுகள் படிமம் எடுக்கும் வசதியை சென்னையில் ஏன் ஏற்படுத்த கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல் அகழாய்வு தொடரவும் முடிவுகளை வெளியிடவும் வலியுறுத்தி வழக்கறிஞர் திரு முருகன் உள்ளிட்ட பலர் மனு செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆதிச்சநல்லூர், கொடுமணல் உள்ளிட்ட 7 இடங்களில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்க்கப்பட்டுள்ளதாகவும் கீழடி ஐந்து மற்றும் ஆறாம் கட்ட ஆய்வுகள் குறித்து விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடந்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அறிக்கை ஏன் தாக்கல் செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார். தொல்லியல் கல்வெட்டை படிமம் எடுக்கும் வசதி மைசூரில் மட்டுமே உள்ளதை சுட்டிக் காட்டி அதன் கிளையை சென்னையில் ஏன் அமைக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழகத்தில் அகழாய்வுகளை மத்திய தொல்லியல் துறையின் முழுமையாக மேற்கொள்ளக்கூடாது என்றும் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.






