--- --:--:-- --

ஜுலை 31-க்கு பிறகு ஊரடங்கு நிலவரம் எப்படி ? 29-ந் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி முக்கிய ஆலோசனை

4

ஜூலை 31-ந் தேதியுடன் 6ம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் நீட்டிப்பதா?அல்லது அடியோடு விலக்கிக் கொள்வதா? என்பது குறித்து வரும் 29-ந் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

கடந்த நான்கைந்து மாதங்களாக உலகை பீதியிலும்,அச்சத்திலும் ஆழ்த்தியுள்ள கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று. இந்த தொற்று பாதிப்பு இல்லாத நாடே இல்லை என்ற அளவுக்கு பரவிக் கிடக்கிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் காலடி எடுத்து வைத்த நிலையில், இதனை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ந் தேதி நள்ளிரவு முதல் முதல் நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

 

பின்னர் அடுத்தடுத்த கட்டமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அங்குள்ள நிலவரத்துக்கு ஏற்ப சில தளர்வுகளுடன் 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இப்படி மொத்தம் 6 கட்டங்களாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 4 மாதங்களைக் கடந்து வரும் ஜூலை 31-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது.

 

இந்த 4 மாத ஊரடங்கால், வேலை இழப்பு, வருவாய் இழப்பு , உற்பத்தி இழப்பு என ஏகப்பட்ட இழப்புகளை சந்திக்க நேரிட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. எனவே, கொரோனா ஒரு பக்கம் அச்சுறுத்தலாக இருந்தாலும், ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவதே தீர்வு என பலரும் கருத ஆரம்பித்துள்ளனர். இப்படிப்பட்ட துணிச்சலான முடிவை கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடந்த வாரம் அதிரடியாக எடுத்து, மாநிலம் முழுவதும் இனி ஊரடங்கு கிடையாது என அறிவித்துவிட்டார்.

 

கவலைக்குரிய விஷயம்

கர்நாடகா போன்று பிற மாநிலங்களிலும் ஊரடங்கு ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திலும் இந்த எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் சென்னையில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் வேளையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரிக்க தொடங்கி உள்ளது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.

 

கொரோனா வேகம்

இப்படி தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் வரும் 31ம் தேதியுடன் நிறைவடையும் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா? தளர்த்துவதா? என்பது குறித்து தமிழக அரசு இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் கருத்துகளை கேட்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதன்படி வரும் 29-ந் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

எதிர்பார்ப்பு

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அல்லது ரத்து அல்லது சில மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தளர்வு, பொதுப் போக்குவரத்தை அனுமதிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனால் இந்தக் கூட்ட முடிவுகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் நிலவுகிறது.

 

Leave a Reply

Right Menu Icon