--- --:--:-- --

ரெஸ்டோ பார் திட்டம் தேவையில்லை, கைவிடாவிட்டால் பாமக போராடும் – அன்புமணி ராமதாஸ்

02

மிழ்நாட்டில் உணவகத்துடன் குடிப்பகம் இணைந்த ரெஸ்டோ பார் திட்டம் தேவையில்லை என தெரிவித்துள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கைவிடாவிட்டால் பாமக போராட்டம் நடத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-“ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதைப் போன்று தமிழ்நாட்டிலும் உணவகங்களுடன் குடிப்பகங்களும் இணைக்கப்பட்ட ரெஸ்டோ பார்களை அமைக்க உரிமம் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பெரும் கேட்டை விளைவிக்கும் திட்டம் குறித்த இந்த செய்திகள் உண்மையா? என்பதை அரசு விளக்க வேண்டும்.

 

 

தமிழ்நாட்டில் தற்போது 3 நிலைகளில் மது குடிப்பகங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அரசு மதுக்கடைகளுடன் இணைந்த குடிப்பகங்கள் HL 1 என்ற உரிமத்துடனும், மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரிலான குடிப்பகங்கள் HL2 என்ற உரிமத்துடனும், நட்சத்திர விடுதிகளில் உள்ள குடிப்பகங்கள் HL3 என்ற உரிமத்துடனும் இயங்கி வருகின்றன. இவை அனைத்திலும் கடுமையான விதிமீறல்களும், சட்டவிரோத மது விற்பனையும் நடைபெற்று வருவதால் அவற்றை மூட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், நலவாழ்வு ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் கூடுதலாக ரெஸ்டோ பார்களை அனுமதிக்கவும், அவற்றுக்காக HL3A என்ற உரிமத்தை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதும் பிற்போக்குத்தனமான செயல்களாகும்.

 

 

 

ரெஸ்டோ பார்களை திறப்பதற்காக அரசுத் தரப்பின் வாதங்களாக கூறப்படுபவை ஏற்றுக்கொள்ளவே முடியாதவை ஆகும். அரசு மதுக்கடைகளுடன் இணைந்த குடிப்பகங்கள் சுகாதாரமானவையாக இல்லை; மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர்களுக்கு மட்டும் தான் மது வழங்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி அனைவருக்கும் மது மற்றும் உணவு வகைகள் வழங்கப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது; இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காகத் தான் ரெஸ்டோ பார்கள் திறக்கப்படவுள்ளதாக அரசு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வாதங்கள் அபத்தமானவையாகும்.

 

 

மது மிகவும் கேடானது; மது சாத்தானுக்கு ஒப்பானது. அதன் வணிகம் தடை செய்யப்பட வேண்டுமே தவிர, அதை ஒழுங்குபடுத்தத் தேவையில்லை. அதையும் மீறி படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் அரசின் கொள்கை முடிவு என்றால் சட்டவிரோதமாக செயல்படும் குடிப்பகங்கள் எந்த வகையை சேர்ந்தவையாக இருந்தாலும் கருணை காட்டாமல் அவற்றை மூட ஆணையிடுவது தான் சரியான, மக்கள் நலன் காக்கும் நடவடிக்கை ஆகும். அதற்கு மாறாக புதிய வகை குடிப்பகங்களை திறக்க முனைவது மோசமான முன்னுதாரணமாக அமைந்து விடும். இந்த வரலாற்றுத் தவறை த.வெ.க அரசு செய்யக் கூடாது.

 

 

அரசு மதுக்கடைகளுடன் கூடிய குடிப்பகங்கள், மனமகிழ்மன்ற குடிப்பகங்கள் ஆகியவற்றுக்கு எதிரான மனநிலை எப்போதும் மக்களிடம் உண்டு. அங்கு சென்று வந்தால், தங்களை சமூகத்தில் தவறாக நினைப்பார்கள் என்று அஞ்சுவார்கள். அந்த அச்சமே அவர்களை அவற்றின் பக்கம் செல்லாமல் தடுத்து விடும். ஆனால், ரெஸ்டோபார்கள் உணவகங்களாகவும் கருதப்படும் என்பதால், அவற்றின் மீது அந்த தவறான முத்திரை இருக்காது. அதனால், மாணவர்கள், இளம்பெண்கள் போன்றவர்களும் ரெஸ்டோபார்களுக்கு தயக்கமின்றி செல்லும் நிலை ஏற்பட்டு விடும். இது மிகவும் ஆபத்தானதும், சமூகக் கேடானதும் ஆகும்.

 

 

அதுமட்டுமின்றி, ரெஸ்டோ பார்களை திறப்பதற்காக கூறப்படும் காரணங்கள் என்னவாக இருந்தாலும், அதன் முதன்மை நோக்கம் அரசுக்கு கூடுதல் வருவாயை ஈட்டுவது தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. வருவாய்க்காக மதுவணிகம் செய்வது மக்கள் நல அரசுக்கு அழகல்ல. கடந்த ஆட்சியில் மது வணிகத்தைப் பெருக்குவதற்காக வணிக வளாகங்களில் தானியங்கி மது வழங்கும் எந்திரங்களை அமைத்தல், 90 மி.லி காகிதக் குடுவையில் (டெட்ரா பேக்) மது வணிகம் செய்தல், விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், திருமணம் போன்ற சமூக ஒன்று கூடல்கள் ஆகியவற்றில் மது வினியோகம் செய்தல் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அவை அனைத்தையும் சட்டப் போராட்டம் நடத்தியும், அரசியல் அழுத்தங்களின் வாயிலாகவும் பாட்டாளி மக்கள் கட்சி முறியடித்தது. அதன்பின் தங்களின் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் வகையில் மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்தது. கடந்த ஆட்சியில் மட்டும் 1200-க்கும் மேற்பட்ட மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டன.

 

 

ஆட்சியாளர்களின் நோக்கம் மதுவை ஒழிப்பதாகத் தான் இருக்க வேண்டும். மதுவிலக்குத் துறையில் செய்யப்படும் சீர்திருத்தங்களும் அவற்றை நோக்கியதாகவே இருக்க வேண்டும். மாறாக, அதிக வசதிகளுடன் ரெஸ்டோ பார்களை திறப்பது, வெளிமாநிலங்களில் இருந்து புதிய மது வகைகளை வாங்கி வினியோகம் செய்வது தமிழ்நாட்டில் மதுப்புழக்கத்தை அதிகரிக்கவே செய்யும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

Leave a Reply

Right Menu Icon