--- --:--:-- --

சசிகலா தொடர்பான பினாமி வழக்கில் தலையிட மாட்டோம்..!

8

றைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் வி.கே.சசிகலா மற்றும் அவரது பினாமி என்று கூறப்படும் வி.எஸ்.ஜே. தினகரன் ஆகியோருக்கு எதிராக ஒரு பரிவர்த்தனை நடவடிக்கை தொடர்பாக, வருமான வரித்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டில் தலையிட முடியாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

 

 

கடந்த 2017-ம் ஆண்டு, பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மாலில் (Spectrum Mall) தினகரன தனக்கு இருந்த பங்குகளை 18 கோடி ரூபாய்க்கு சசிகலாவிடம் விற்பனை செய்துள்ளார். இந்த விவகாரத்தில், தினகரன், சசிகலாவின் பினாமியாக செயல்பட்டார் என்று கூறி, பினாமி சொத்து பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி வருமானவரித்துறை சார்பில், தினகரனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

 

மேலும் இச்சட்டத்தின் கீழ் தற்காலிக சொத்து முடக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதில் பினாமி பரிவர்த்தனை எதுவும் நடைபெறவில்லை என்று கூறி, சொத்து முடக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதிப்படுத்த தீர்ப்பாய அதிகாரி மறுத்துவிட்டார். இதனை எதிர்த்து, வருமான வரித்துறை சார்பில், 763 நாட்கள் தாமதத்திற்குப் பிறகு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் சட்டப்பூர்வ மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அந்த காலதாமதத்தை ஏற்றுக்கொண்டு, வழக்கை அடுத்தக்கட்ட விசாரணைக்கு ஒத்திவைத்தது.

 

மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் இந்த நடவடிக்கையால் அதிருப்தியடைந்த தினகரன், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்ய 45 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது என்றும், ஆனால் இந்த வழக்கில் போதிய காரணங்கள் இன்றி 763 நாட்கள் தாமதமாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே மாநிலத்தின் நலன் அல்லது வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு தீர்ப்பாயம் இதனை அனுமதித்திருக்கக் கூடாது என்றும் வாதிடப்பட்டது.

 

இந்த வாதத்தை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு, அதிகாரிகள் அளித்த காரணங்களில் திருப்தியடைந்து, நீதியின் நலன் கருதி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி காலதாமதத்தை மன்னித்து மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட பிறகு, அந்த முடிவு ஆதாரமற்றதாகவோ அல்லது தன்னிச்சையானதாகவோ இல்லாத வரை, மேல்முறையீட்டு நீதிமன்றமான இந்த நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Right Menu Icon