--- --:--:-- --

அமைச்சரவையில் இடம்பெற்றது ஏன்? – திருமாவளவன் எம்.பி

1

விசிகவின் நேர்மையையும் அரசியல் தூய்மையையும் களங்கப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை” என தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், ”போகிறபோக்கில் களங்கப்படுத்துவது திட்டமிட்ட அவதூறு” என்று சாடியுள்ளார். விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, தவெகவை ஆதரிக்கும் முடிவை மேற்கொள்வதற்கு தன்னலமோ, பதவி ஆசையோ முதன்மையாவை அல்ல; தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிதான் காரணம் என்பதை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்கு அறிவார்.

 

 

எங்கள் ஆதரவு குறித்து முடிவை அறிவிக்கும் முன்பு எங்கள் மதச்சார்பற்ற கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணன் கவனத்துக்கு கொண்டு சென்றோம்; அவரின் வாழ்த்துகளுடன், அவரின் இசைவுடன்தான் இந்த ஆதரவை வழங்கினோம் என்றும் தெரிவித்தார். “முன்னதாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் 5-ம் தேதியே தோழமை கட்சிகள் அனைவரையும் அழைத்து, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம். விஜய் ஆட்சியமைக்க நாம் இடையூறாக இருக்க வேண்டியதில்லை என்று கருத்தை முன்வைத்தார். அவர் அரசியல் பக்குவம் அதுதான்” என்று விளக்கமளித்தார்.

 

 

விசிகவின் நேர்மையையும் அரசியல் தூய்மையையும் களங்கப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், போகிறபோக்கில் களங்கப்படுத்துவது திட்டமிட்ட அவதூறு என்று சாடியுள்ளார். திமுக கூட்டணியை உடைக்க சதி நடந்தது. “என்னை துருப்பு சீட்டாக பயன்படுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே திமுக கூட்டணியை உடைக்க சதி நடந்தது. ஆனால் நான் எதற்கும் வளைந்து கொடுத்தது இல்லை. என்னை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி திமுக கூட்டணியை சிதறடிக்க பல முனைகளில் இருந்தும் முயற்சித்தனர். ஆனால் திமுக கூட்டணியை பலவீனப்படுத்த விட மாட்டேன் என உறுதியாக நின்று அதனை நடத்தியும் காட்டினேன்.

 

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதற்காக என்னாலான முயற்சிகளை செய்தேன். ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின் இந்தக் கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை. குறிப்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்த முடிவை நிறுத்த எனக்கு வலிமை இல்லை. அதே போல் தான் ஐயூஎம்எல் கட்சியும், அவர்கள் நிலைப்பாட்டில் என்னால் தலையிட முடியாது. ஆனால் சமூக வலைதளங்களில் என்னை மட்டும் குறிவைத்து அவதூறு கணைகளை ஏவுவது ஏன் என்று தெரியவில்லை என திருமாவளவன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அமைச்சரவையில் நான் இடம்பெற மாட்டேன். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய திருமாவளவன், நானே அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்து வந்தபோது நான் அதற்கு உடனடியாக இணங்கவில்லை. என்னுடைய தனிப்பட்ட விருப்பம் வெளியில் இருந்து ஆதரவு என்பதே, ஆனால் பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்தை கேட்டு அதற்கேற்ப முடிவை எடுக்க வேண்டியது கட்சி தலைவரான என்னுடைய கடமை. எனவே விசிக உறுப்பினர்களின் கருத்தை ஏற்று கொண்டு அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று முடிவெடுத்த போது, அதற்கு வன்னி அரசை பரிந்துரைப்பதே சரி என முடிவு செய்தேன்”என்று திருமாவளவன் கூறினார்.

 

“தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது குறித்து மேற்கொண்டு கருத்து சொல்ல எதுவுமில்லை. பிற்கால தேர்தல் கூட்டணி பற்றிய கேள்விக்கு, தேர்தல் நேரத்தில் தான் யாருடன் பயணிப்பது, கூட்டணி என்பது குறித்த முடிவுகளை எடுப்பது வழக்கம். அமைச்சரவையில் நான் இடம்பெற வேண்டும் என தவெகவினர் வலியுறுத்தினர். ஆனால், நான் இடம்பெறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் வன்னி அரசு அமைச்சராவது தான் சரியாக இருக்கும் என முடிவு செய்தேன். அமைச்சராக வேண்டாம் என்பதில் இப்போதும் உறுதியாக உள்ளேன். ” எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon