அதிர வைக்கும் விஜய்! 120 இடங்கள் கிடைக்கும் என கணிப்பில் தகவல்.. கூட்டணி ஆட்சியை நோக்கி தமிழ்நாடு..!
தமிழக அரசியலில் இது எதிர்பாராத திருப்பம் மட்டுமல்ல, ஒரு மாபெரும் சுனாமி என்றே சொல்லலாம். அமைதியாகத் திரைக்குப் பின்னால் காய் நகர்த்திக் கொண்டிருந்த தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், இன்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு துருவங்களையும் அசைத்துப் பார்த்திருக்கிறார். “வெற்றி நிச்சயம், இது சரித்திரத்தின் ஆரம்பம்” என விஜய் மேடைகளில் முழங்கியபோது எள்ளி நகையாடியவர்கள் இன்று திகைத்துப் போய் நிற்கிறார்கள். ஆக்ஸிஸ் மை இந்தியா – இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு, தமிழக அரசியலில் இதுவரை நிலவி வந்த ஒற்றைத் தலைமை பிம்பத்தை அடித்து நொறுக்கியிருக்கிறது.
கோட்டை தொட்டுவிடும் தூரம் தான்!
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட 2023-ம் ஆண்டு முதல், விஜய் வெறும் ஒரு நடிகராக மட்டுமே பார்க்கப்பட்டார். ஆனால், தேர்தல் முடிவுகளுக்கு முந்தைய இந்த எக்ஸிட் போல் முடிவுகள் அவர் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்திருப்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றன. 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் தானே களம் கண்டது தவெக தொண்டர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தைத் தந்தது. “தலைவரே முன்னால் நிற்கும்போது எங்களுக்கு என்ன பயம்?” என்று களத்தில் இறங்கிய தவெக தம்பிகள், இன்று கருத்து கணிப்பு முடிவுகளைப் பார்த்து உற்சாகத்தில் மிதக்கிறார்கள்.
98 முதல் 120 தொகுதிகள் வரை தவெக கைப்பற்றும் என்கிற தகவல் வெளியானதும், தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு ‘சஸ்பென்ஸ்’ நிறைந்த சூழல் உருவாகியுள்ளது. தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 117 இடங்களை விஜய் நெருங்கிக் கொண்டிருப்பது, பாரம்பரியக் கட்சிகளின் வேர்களில் வெந்நீர் ஊற்றியது போலாகிவிட்டது.
அதிர்ச்சியில் அறிவாலயமும்… அரண்டு போன எடப்பாடியும்!
இந்தக் கணிப்பு முடிவுகள் வெளியான அடுத்த நிமிடம் முதல் அறிவாலயத்திலும், கிரீன்வேஸ் சாலை இல்லத்திலும் விளக்குகள் அணையவே இல்லை. 92 முதல் 110 இடங்கள் வரை மட்டுமே திமுகவுக்குக் கிடைக்கும் என்கிற கணிப்பு, முதல்வர் ஸ்டாலினை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“எல்லா திட்டங்களும் மக்களிடம் போய்ச் சேர்ந்ததே, அப்புறம் எப்படி இந்தத் தொய்வு?” என்கிற விவாதத்தில் அமைச்சர்கள் திணறி வருகிறார்கள்.

மறுபுறம், 22 முதல் 32 தொகுதிகள் வரை மட்டுமே அதிமுக வெற்றி பெறும் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது. “இரட்டை இலைக்கே இந்த நிலைமையா?” என்று ரத்தத்தின் ரத்தங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். கோட்டையில் மீண்டும் கொடி ஏற்றுவோம் என்று நம்பிக்கையோடு இருந்த இரு பெரும் திராவிடக் கட்சிகளும், விஜய்யின் இந்த ‘என்ட்ரி’யால் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
புலம்பும் கூட்டணிக் கட்சிகள்: “தவறவிட்டோமே தங்க வாய்ப்பை!”
இந்தத் தேர்தல் முடிவுகளின் கணிப்பு இன்னொரு சுவாரஸ்யமான பக்கத்தையும் காட்டியிருக்கிறது. காங்கிரஸ் மற்றும் திருமாவளவனின் விசிக தலைவர்கள் இன்று ரகசியமாகப் புலம்பி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. “விஜய் கூட அப்பவே கை கோர்த்திருக்கலாம்” என்பதே அவர்களின் தற்போதைய ஆதங்கமாக இருக்கிறது.

ஆரம்பத்திலிருந்தே விஜய்யை விமர்சித்த சில கூட்டணிக் கட்சித் தலைவர்கள், இப்போது “தவெகவுடன் கூட்டணி அமைத்திருந்தால், இன்று விஜய் ஆட்சிக்கு வருவது நூறு சதவீதம் உறுதியாகியிருக்கும். நமக்கும் அதிக இடங்கள் கிடைத்திருக்குமே” எனத் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்களாம். விஜய்யின் மக்கள் செல்வாக்கை ஆரம்பத்தில் கணிக்கத் தவறியதுதான் தங்களுக்குப் பின்னடைவு என்பதை இப்போது அவர்கள் உணர்கிறார்கள்.
வாகனப் பேரணியால் விளைந்த மேஜிக்!
விஜய் 234 தொகுதிகளுக்கும் செல்லவில்லை. ஆனால் அவர் சென்ற சில மாவட்டங்களில் கூடிய கூட்டம், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல். குறிப்பாகச் சென்னையில் மட்டும் அனைத்து தொகுதிகளிலும் அவர் நடத்திய வாகனப் பேரணி, இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
“விஜய் வந்தால் மாற்றம் வரும்” என்கிற பிம்பம் சாதாரண மக்களிடம் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அவர் எங்கு சென்றாலும் அலைமோதிய மக்கள் கூட்டம் வெறும் ‘சினிமா கூட்டம்’ அல்ல, அது ‘வாக்குச் சீட்டு கூட்டம்’ என்பதை இந்தக் கருத்து கணிப்பு முடிவுகள் மெய்ப்பித்துள்ளன.
திமுக, அதிமுக வாய்ப்புகள் எப்படி?
மொத்தம் 6 நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் 3 நிறுவங்கள் திமுக ஆட்சிக்கு வரும் என்கின்றன. அதன்படி திமுக அணிக்கு 122-132 இடங்கள், அதிமுக 87-110 இடங்கள், தவெக 10-12 இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஜேவிசி நிறுவனம் உள்ளிட்ட இரு நிறுவனங்களின் கருத்துக் கணிப்பில் அதிமுக 128-147 இடங்கள், திமுக 75-95 இடங்கள், தவெகவுக்கு 8-15 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா டுடேவுக்காக மை ஆக்ஸிஸ் நடத்திய கருத்துக் கணிப்பு மட்டும் விஜய்க்கு 120 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கூட்டணி ஆட்சியா? குதிரை பேரமா?
எது எப்படியோ, 118 என்ற பெரும்பான்மை இடங்கள் யாருக்கும் கிடைக்காது என்கிற சூழல் நிலவுவதால், தமிழகம் கூட்டணி ஆட்சியை நோக்கி நகர்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
தமிழக வெற்றிக் கழகம் யாரிடமும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்டது அந்தப் கட்சிக்கு ஒரு பலமாக அமைந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான அந்த மேஜிக் நம்பரைத் தொட என்ன செய்யப் போகிறார்கள் என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கிறது.
“நாங்கள் தனித்து தான் நிற்போம்” என்று சொன்ன விஜய், ஒருவேளை பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆதரவு தேடுவாரா அல்லது எதிர்க்கட்சி வரிசையில் அமருவாரா என்பது தற்போதைக்கு மர்மமாகவே இருக்கிறது.
ஒரு பக்கம் தவெக, மறுபக்கம் திமுக என இழுபறி நீடிக்கும் பட்சத்தில், தமிழக அரசியல் களம் இனிவரும் நாட்களில் இன்னும் பல அதிரடித் திருப்பங்களைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒட்டுமொத்தத்தில், இந்தத் தேர்தல் கணிப்பு முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை எழுதியிருக்கிறது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்கிற சூழலில், தமிழகம் ஒரு நிலையற்ற தன்மையை நோக்கிச் செல்கிறதா அல்லது ஒரு புதிய கூட்டணியின் உதயம் ஏற்படுமா என்பது மே 4ஆம் தேதி தெரியவரும் முடிவுகளில் ஒளிந்திருக்கிறது. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போகும் அந்த நாள், பலருக்கு வாழ்வாகவும், பலருக்கு வீழ்ச்சியாகவும் அமையப்போவது மட்டும் உறுதி!





