--- --:--:-- --

ஏரல் அருகே காதல் திருமணம் விவாகரத்தில் பெண் உட்பட 2 பேர் வெட்டிக் கொலை

4.1

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிவகளை, பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (55). இவரது மகன் விக்னேஷ் (21), இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மகள் சங்கீதா (20) என்பவரும் காதலித்து கடந்த 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு சங்கீதாவின் அண்ணன் முத்துராமலிங்க ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே முட்டல்,மோதல் வந்துள்ளது.

 

இந்நிலையில் நேற்று சமாதானப் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக கூறப்படுகிறது..இதில் ஆத்திரம் அடைந்த முத்துராமலிங்க ராஜா, அவரது சித்தப்பா மகன் முத்துச்சுடர் மற்றும் அவர்களது நண்பர் அருணாச்சலம் ஆகிய 3 பேரும் சேர்ந்து விக்னேஷ், அவரது தந்தை லட்சுமணன், விக்னேஷின் நண்பர் அருண் ஆகிய 3 பேரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

 

இதனைப் பார்த்த விக்னேஷின் தாயார் முத்துப்பேச்சி தடுக்க முயலும் போது அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் முத்துப்பேச்சி (45) மற்றும் அருண் (20) ஆக இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

மேலும், விக்னேஷ் மற்றும் அவரது தந்தை லட்சுமணன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த இரட்டைக் கொலை எதிரொலியாக ஏரல் பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டார்.

 

இரட்டைக் கொலை தொடர்பாக ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள முத்துராமலிங்க ராஜா, முத்துச்சுடர், மற்றும் அருணாச்சலம் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon