இனி வரும் ஒவ்வொரு தேர்தலிலும் திமுக 100% தோல்வி அடையப் போவது உறுதி – தவெக ஐடி விங்
அதிமுக உள்பட மாற்றுக் கட்சியினர் சுமார் 5,000 பேர் திமுகவில் இணையும் விழா சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், எம்ஜிஆரை மையப்படுத்தி பேசினார். ஸ்டாலின் முதல்வராகவேண்டும் என மக்கள் வாக்களித்த கட்சியினரின் ஆதரவில்தான் தற்போதைய ஆட்சி நடக்கிறது என்றார்.
தவெக அரசு சட்டம் ஒழுங்கு பிரச்னையில் கவனம் செலுத்துவதில்லை என்றும் தவெகவுக்கு வாக்களித்தவர்களும், வாக்களிக்காதவர்களும் கஷ்டப்படுகிறார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், எக்ஸ் பக்கத்தில் தவெக ஐடிவி விங் பதிலளித்துள்ளது. அதில், எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தார் என்று கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. .ஸ்டாலின் பெருமை பொங்க பேசினார்.
தி.மு.க.வால்தான் முதன்முதலில் எம்.எல்.ஏ. ஆனார். அதுதான் வரலாறு என்றெல்லாம் சொன்னவர், பிறகுதான் தனிக்கட்சி கண்டார் என்றும் தொடர்ந்து சொன்னார். ஆனால், தன் வாழ்நாள் எதிரியே தி.மு.க.தான் என்று கடைசிவரை வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை ஒரு தீயசக்தி என்று அன்று சொன்னவர் எம்.ஜி.ஆர். தான் உயிரோடு இருக்கும்வரை தி.மு.க.வைக் கூப்பிலேயே உட்கார வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். என் நண்பர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்து வந்ததும் ஆட்சியைத் திருப்பித் தந்துவிடுகிறேன்.
அதுவரை என்னிடம் ஆட்சியைக் கொடுங்கள் என்று தி.மு.க.வைக் கெஞ்ச வைத்தார் எம்.ஜி.ஆர். இதுவும் வரலாறுதான் என்ற உண்மையைச் சொல்வாரா ஸ்டாலின் சார்?. சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்காமல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையே சந்தி சிரிக்க வைத்தவரும் இன்றைய நிலைக்கு ஆழமாய் விதை போட்டவரும் ஸ்டாலின் சார்தான். ஆனால், எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இன்று ஏதோ தன்னால் தமிழகம் பாழ்படவே இல்லை என்பதுபோலப் பேசித் தன் நகைச்சுவைத் திறனைக் காட்டுகிறார்.
இந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். மூன்று வருடத்தில் வரலாம். ஆறு மாதத்தில்கூட தேர்தல் வரலாம் என்று பொறாமையும் விரக்தியும் பொங்கப் பேசுகிறார். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பதை மறந்துவிட்டு வாய்க்கு வந்ததைப் பேசுகிறார். மக்கள் தீர்ப்பை அவமதிப்பு செய்கிறார். ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தியில் விம்முகிறார். வெடிக்கிறார். துடிக்கிறார்.
ஸ்டாலின் சார் என்னதான் ஆலாய்ப் பறந்தாலும் அங்கலாய்த்தாலும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாலும் இனி வருகின்ற ஒவ்வொரு தேர்தலிலும் திமுக 100% சதவிகிதம் துடைத்தெறியப்படப் போவது உறுதி என்று தெரிவித்துள்ளது.





