தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!
தமிழ்நாட்டில் இன்று (திங்கள்கிழமை) 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கர்நாடகாவிலிருந்து குமரிக்கடல் வரை தமிழ்நாடு வழியாக ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இந்த நிலையில், இன்று கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களிலும், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு, சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





