ஊரடங்கால் சரக்கு கிடைக்காமல் அல்லாடும் குடிமகன்கள்…! ஷேவிங் லோஷனை போதையேற்றிய 2 பேர் உயிர் போனது!!
ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் சரக்கு கிடைக்காமல் அல்லாடும் குடிமகன்கள், எதைக் குடித்தால் போதை ஏறும் என விபரீத யுக்திகளை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.புதுக்கோட்டை அருகே ஷேவிங் லோஷனை குளிர்பானத்தில் கலக்கி குடித்த 2 மீனவர்கள் உயிர் பறி போயுள்ளது.
இந்தியாவிலேயே குடிகாரர்கள் அதிகம் உள்ள மாநிலமாகி விட்டது தமிழகம். தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடை என சரக்கு விற்பனை அமோகமாகி, சாமான்யர்களின் சம்பாத்தியத்தில் பெரும் பகுதி தமிழக அரசின் கஜானாவை நிரப்பி வந்தது.
கொரோனா பீதியால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளும் மூடுவிழா கண்டு விட்டன. இதனால், தினமும் குடித்தே பாழாய்ப் போன குடிமகன்களின் பாடுதான் இப்போது படு திண்டாட்டமாகி விட்டது. ஊரடங்கால் இப்போது வேலை வெட்டியும் இல்லாததால் சரக்கு எங்கே கிடைக்கும் என தேடி அலைகின்றனர். இதைப் பயன்படுத்தி சரக்கு பாட்டில்களை ஏற்கனவே வாங்கி பதுக்கி வைத்திருந்த சிலர், கள்ளச்சந்தையில் இரு மடங்கு விலை கொடுத்து கடந்த சில நாட்களாக குடித்து வந்தனர். சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை உடைத்து பாட்டில்களை அள்ளிச் சென்ற சம்பவங்களும் அரங்கேறின.
இப்போது, அப்படி பதுக்கி வைத்திருந்த டாஸ்மாக் சரக்குகளும் தீர்ந்து போனதால் போதைக்கு மாற்றாக சில விபரீத வழிமுறைகளை சிலர் கையாள ஆரம்பித்துள்ளதும் தெரிய வருகிறது. போதை மாத்திரை, தூக்க மாத்திரை, இருமலுக்கு பயன்படுத்தும் டானிக் போன்றவற்றை வாங்க ஏராளமானோர் மருந்துக் கடைகளுக்கு படையெடுத்து வருவதால், சமாளிக்க முடியாமல் கடைக்காரர்கள் திண்டாடுவதாக தகவல் .
வேறு சில குடிமகன்களோ சைக்கிள் டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் சொல்யூசன் திரவத்தை தீயில் எரித்து அதன் புகையை முகர்ந்து போதையேற்றும் விபரீதங்களும் அரங்கேறி வருகின்றன. ஒரு பக்கம் தமிழகத்தில் 20 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த கள்ளச்சாராயமும் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளதும் வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. இதற்கு உதாரணம் தான் 2 நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய கோஷ்டி ஒன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதை கூறலாம்.
இப்படி போதைக்காக குடிமகன்கள் மாற்று வழியை தேடுவது தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் ஷேவிங் லோஷனை (ஆப்டர் சேவ் லோஷன்) குளிர்பானத்தில் கலக்கி குடித்து போதையேற்றும் விபரீதம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
போதைக்காக ராஜா, அருண் பாண்டியன், அன்வர் ராஜா ஆகிய 3 மீனவர்களும் ஷேவிங் லோஷனை குளிர்பானத்தில் கலந்து குடித்த சில நிமிடங்களில் மயங்கி விழ, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ராஜா, அருண் பாண்டியன் இருவரும் உயிரிழந்து விட்டனர். அன்வர் ராஜாவின் உயிர் ஊசலாடுகிறது . போதை ஆசாமிகள் இன்னும் போதைக்காக இன்னும் என்னென்ன விபரீதங்களை கையாளப் போகிறார்களோ என்பது தான் திகிலை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.






