14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் செய்யாதது ஏன்?
தமிழகத்தில் உள்ள 14 பல்கலைகழகங்களில் துணைவேந்தர்கள் பணி நிரப்பப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக எஸ். முத்தையா நியமிக்கப்பட்டதை எதிர்த்து, அவர் உரிய தகுதிகளைப் பெற்றிருக்கவில்லை எனக் கூறி ஏ.வேளாங்கண்ணி ஜோசப் என்பவர் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரண நடைபெற்றபோது, தமிழகத்தில் உள்ள சுமார் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை என்பது நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
மேலும், பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தற்போது பொறுப்பு பதிவாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வருவதும், அனைத்து முடிவுகளும் ஒருங்கிணைப்புக் குழுவால் எடுக்கப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள சுமார் 14 அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் ஏன் நிரப்பப்படாமல் உள்ளன, மேலும் அந்தக் காலியிடங்களை நிரப்ப அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மாநில அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தனது நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில், மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் முத்தையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அவருக்கு தேவையான அனைத்து தகுதிகளும் இருப்பதாகவும், உரிய அதிகாரம் பெற்ற அமைப்பால் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், முத்தையா தற்காலிக அடிப்படையில் மட்டுமே பொறுப்பு பதிவாளராகச் செயல்பட்டு வருவதாகவும், நிரந்தர பதிவாளரை நியமிப்பதற்கான நடைமுறை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிமன்றம், துணைவேந்தர் பதவிகள் ஏன் நிரப்பப்படாமல் உள்ளன, அந்தக் காலியிடங்களை நிரப்ப அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து உயர்கல்வித் துறை அரசின் முதன்மைச் செயலரிடம் இருந்து உரிய விளக்கங்களைப் பெற்று வருமாறு கூடுதல் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு மூன்று வாரங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




