பழம்பெரும் நடிகை செளகார் ஜானகியின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது!
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 94. அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகை செளகார் ஜானகி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இதயத்துறை நிபுணர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று மதியம் 1.59 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 1950-ஆம் ஆண்டு, சௌகார் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 1952-ஆம் ஆண்டு வளையாபதி படத்தின் மூலம் தமிழில் தடம்பதித்தார். தொடர்ந்து எதிர்நீச்சல், பாமா விஜயம், இரு கோடுகள், நீர்க்குமுழி உள்ளிட்ட படங்கள் மூலம் முத்திரை பதித்தார்.
70 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக, 2020-ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான பிஸ்கோத் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் செளகார் ஜானகிக்கு 400-ஆவது படமாக அமைந்தது. திரைத்துறையில் சாதித்த சௌகார் ஜானகிக்கு கடந்த 2022 -ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அதன்படி சௌகார் ஜானகிக்கு திரையுலகினர், பொதுமக்கள் நேரில் அஞ்சலி வருகின்றனர். தொடர்ந்து இன்று மாலை பெசன்ட்நகர் மின்மயானத்தில் உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




