உயர் நீதிமன்ற தடையை மீறி தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம்..! இஸ்லாமிய அமைப்புகள் திட்டவட்டம்!!
உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளை நடைபெறும் என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளனர்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் போலீஸ் தடியடியை கண்டித்தும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் நாளை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்திருந்தன. இந்த சட்டப் பேரவை முற்றுகை போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும்.
எனவே முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வாராகி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்து அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தார். இன்று காலை இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும், வழக்கை பட்டியலிட்ட பின், விசாரிக்க முடியும் என கூறியதுடன், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காவல்துறையினர் கவனித்துக் கொள்வார்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வாராகி மனு மீது இன்று மாலை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, நாளை நடத்த உள்ள தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்திற்கு நீதிபதிகள் தடை விதித்தன். மேலும் வரும் மார்ச் 11ஆம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர் .
இதனால் நாளை முற்றுகை போராட்டம் நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக இருந்தது. ஆனால், திட்டமிட்டபடி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளனர். உயர்நீதிமன்ற வழக்கில் தாங்கள் எதிர்மனுதாரராக சேர்க்கப்படவில்லை. இதனால் நீதி மன்ற தடை உத்தரவு தங்களுக்கு பொருந்தாது என இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் காஜாமைதீன் தெரிவித்துள்ளார்.
தேசியக் கொடியை ஏந்தி அமைதி வழியில் போராட்டம் நடைபெறும் எனவும், கலைவாணர் அரங்கில் இருந்து பேரணியாக சென்று நலைமைச் செயலாத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், எம்எல்ஏக்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாகவும் காஜாமைதீன் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற தடையையும் மீறி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தலைமைச் செயலக வளாகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாளைய போராட்டத்தில் பங்கேற்போர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்றே தெரிகிறது.





