தடையை மீறிசட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம்..! சென்னையில் பல்லாயிரம் பேர் பேரணி!!
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிக் கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்தச் சட்டத்திற்கு எதிராக பல மாநிலங்களில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது போல், தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஆளும் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்ற மறுப்பதால், சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தப் போவதாக இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று மாலை திடீரென தடை விதித்தது. அடுத்த மாதம் 11-ந் தேதி வரை தலைமைச் செயலக வளாகத்தை சுற்றியுள்ள போராட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றம் விதித்த தடை தங்களை கட்டுப்படுத்தாது என்றும், திட்டமிட்டபடி இன்று சட்டப் பேரவை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அமைதி வழியில், தேசியக் கொடியை ஏந்திய படி பேரணியாகச் சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என்றும் இதில் பல்வேறு கட்சித் தலைவர்களும், அனைத்து சமுதாய தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டதால், நேற்று இரவு முதலே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் இருந்து பேரணி புறப்பட்டது. ஆண்கள், பெண்கள் என பல்லாயிரக் கணக்கானோர் கைகளில் தேசியக் கொடி ஏந்தியபடி, குடியுரிமை சட்டத்திற்கு எதிரான முழக்கங்களுடன் பேரணியில் செல்கின்றனர். இந்தப் பேரணியில், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
“சேப்பாக்கம், பீச் ரோடு வழியாக சட்டசபை நோக்கி முற்றுகைக்கு செல்லும் பல்லாயிரக்கணக்கானோரை தடுத்து நிறுத்தி கைது செய்ய, சட்டசபைக்கு பல மீட்டர் அப்பால் தடுப்புகள் அமைத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வருவதால் பரபரப்பு நிலவுகிறது .”





