--- --:--:-- --

காலனி நீக்கம் முதல்வர் அறிவிப்பிற்கு திருமாவளவன் வரவேற்பு..!

1

காவல்துறை மானிய கோரிக்கையில் நேற்று பேசிய விசிக உறுப்பினர் சிந்தனை செல்வன், காலனி என்ற சொல்லை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.

 

இன்று பதிலுரை அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உறுப்பினர் சிந்தனை செல்வன் கோரிக்கையின் அடிப்படையில், ஆதிக்குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் பதிவாகி இருக்கிறது என்றும், ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமையின் குறியீடு சொல்லாக மாறி இருப்பதால், காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்திலும் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், என முதலமைச்சர் அறிவித்தார்.

 

இந்நிலையில், சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்த அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “அதிமுக பாஜக கூட்டணி குறித்து நாங்கள் குறை சொல்லவில்லை, குற்றம் சொல்லவில்லை, அதிமுகவுக்கு உள்ள வலிமைகளை தங்களுக்கானது என்பது போன்ற யுக்திகளை பாஜக கையாளுகிறது.

 

இப்படித்தான் பாஜக வளர முடியாத மாநிலங்களில் எல்லாம் கூட்டணி கட்சிகளின் வாயிலாக வலிமையை பெற்று அது வளர்ந்து இருக்கிறது. பாஜக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கிறதோ, அந்த கட்சி நாளடைவில் தங்களுடைய வாக்கு வங்கியை இழந்து விடுகிறது. அப்படி ஒரு சூழல் நடந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு தான் ஒரு வேண்டுகோளாக வைத்தேன்.

 

வைகை செல்வன் மேடையில் பேசிய ஒரு கருத்துக்கு விடையளிக்கும் வகையில் இந்த கருத்தை நான் பதிவு செய்தேன்.காவேரி பிரச்சனை, இந்தி எதிர்ப்பு போன்ற பிரச்சனைகளுக்கு திமுக அதிமுக தனித்தனியே இயங்கினாலும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

 

தேர்தல் அரசியலில் இருவரும் எதிர் எதிர் துருவங்களில் நின்றாலும் கூட, தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற பிரச்சனைகள் வரும்போது அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும், ஒரு காலத்தில் நின்று குரல் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் திமுக, அதிமுக இரு கட்சிகளும் மொழி, இனம், தமிழர் பண்பாடு ஆகியவற்றை காப்பதற்கு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் இந்த கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளேன்.காலனி என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது என்ற முதல்வரின் அறிவிப்பை விசிக வரவேற்கிறது.

 

 

சாதி பெயரில் உள்ள ஊர், தெருக்கள் அகற்றப்பட வேண்டும். மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டு வர விசிக கோரிக்கை வைக்கிறது.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் கூட மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவந்துள்ளனர். அதேபோல் தமிழகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Right Menu Icon