பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15,000ஆக உயர்வு..!
தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினரின் போராட்டம் இன்று 20-வது நாளை எட்டியுள்ளது.
நேற்று போராட்டத்தின் போது ஆசிரியர்களைப் போலீசார் கைது செய்த போதிலும், “நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை பொங்கல் பண்டிகைக்குக் கூட ஊர் செல்லமாட்டோம்” என ஆசிரியர்கள் உறுதியுடன் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்தப் பதற்றமான சூழலைத் தணிக்க, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (ஜனவரி 14) ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கைகள் தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (ஜனவரி 14) ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார். இடைநிலை ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கையின் மையப் பகுதி, ஒரே பதவியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு இடையே நிலவும் கடுமையான ஊதிய முரண்பாடுதான்.
2009-ஆம் ஆண்டுக்கு முன்னர் பணியில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் சுமார் ₹8,370 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அதே இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ₹5,200 ஆகக் குறைத்து நிர்ணயிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் ₹3,170 ஆக இருந்த இந்த அடிப்படை ஊதிய முரண்பாடு, தற்போதுள்ள அகவிலைப்படி (DA) மற்றும் பிற சலுகைகளுடன் சேர்த்து மாதத்திற்கு சுமார் ₹27,000 என்ற மிகப் பெரிய தொகையாக அதிகரித்துள்ளது.
ஒரே பணியைச் செய்யும் தங்களுக்கு ஒரே ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திதான் இந்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முகாம் அலுவலகத்தில் இன்று காலையில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பகுதிநேர ஆசிரியர்களின் மாத ஊதியம் ₹12,500-லிருந்து ₹15,000-ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “இதுவரை கோடை விடுமுறை மாதமான மே மாதத்திற்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. இனிமேல் அம்மாதத்தில் ₹10,000 (75% ஊதியம்) வழங்கப்படும். மறைந்த ஆசிரியர்களுக்கு உதவி: பணியின் போது உயிரிழந்த 200 பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய ₹3,548 கோடி கல்வி நிதி இன்னும் வராத நிலையிலும், ஆசிரியர்களின் நலன் கருதி நிதி நெருக்கடியைப் பொருட்படுத்தாமல் முதலமைச்சர் இந்த உயர்வை வழங்கியிருக்கிறார். பொங்கல் திருநாளில் ஆசிரியர்கள் வீதியில் போராடுவது மன வருத்தத்தைத் தருகிறது. அவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
ஆசிரியர்களின் ‘பணி நிரந்தரம்’ கோரிக்கைதொடர்பாக மற்ற மாநிலங்களின் தீர்ப்புகள் மற்றும் சட்ட வல்லுநர்களின் கருத்துகளை ஆய்வு செய்து வருகிறோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு ஒரு இடைக்கால நிவாரணமே. விரைவில் நிரந்தரத் தீர்வு காண அரசு முயற்சிக்கும்” என்று தெரிவித்தார்.
இந்த ஊதிய உயர்வு அறிவிப்பு, பல நாட்களாகப் போராடி வரும் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் அளித்த வாக்குறுதிகளை ஏற்றுப் போராட்டத்தைக் கைவிடுவது குறித்து ஆசிரியர் சங்கங்கள் இன்று மாலை தங்களின் இறுதி முடிவை அறிவிக்க உள்ளனர்.





