தமிழ்நாடு பாணியில் புதிய கல்வி கொள்கையை நிராகரித்த கர்நாடகா அரசு!
கர்நாடகாவில் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் அறிவித்துள்ளார்.மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக, மாநில கல்வி கொள்கையை அமல்படுத்துவது என முடிவு செய்து குழுவையும் அமைத்துள்ளது.இதே பாணியில் தற்போது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசும் களமிறங்கி உள்ளது.
பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறியதாவது: மாநில பல்கலைக் கழக துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்கள் கூட புதிய கல்விக் கொள்கையில் ஆர்வம் காட்டாத நிலைதான் இருந்து வருகிறது.தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இந்த புதிய கல்வி கொள்கையை நிராகரிப்பதாகவும் அறிவித்திருக்கின்றன.
தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையை நிராகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் மாநில அரசின் கல்வி கொள்கை நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான ஒரு குழுவையும் அமைக்க மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த குழு புதிய மாநில கல்வி கொள்கை குழு குறித்து பரிந்துரைகள் வழங்கும் என்றார்.
கர்நாடகாவில் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் அறிவித்துள்ளார்.





