--- --:--:-- --

காவலர்களுக்கு ஜாமீன் மறுத்து ஐகோர்ட் கடும் கண்டனம்..!

3

பொய்யான ஒரு புகாருக்காக ஒருவரை இத்தனை பேர் சேர்ந்து அடித்தே கொன்றுவிட்டீர்கள். காவல்துறையின் செயலைப் பார்த்தால் மனமே பதறுகிறது என்று சிவகங்கை அஜித்குமார் காவல் மரண வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் கைதான காவலர்களுக்கு ஜாமீன் வழங்கவும் நீதிபதி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

 

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமார், கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 5 காவலர்கள், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது சி.பி.ஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “அஜித்குமாரின் மரணம் ‘காவல் மரணம்’ என்பது உறுதியாகியுள்ளது. நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டுப் புகாரின் பெயரில் அவர் விசாரிக்கப்பட்டார். ஆனால், அந்தப் புகாரில் உண்மையில்லை. இந்தச் சம்பவத்தில் டிஎஸ்பி, ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவலர்கள் என மொத்தம் 10 பேருக்குத் தொடர்பு உள்ளது” என்று அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து நீதிபதி ஸ்ரீமதி காவல்துறையினரைக் கடுமையாகச் சாடினார். “பொய் புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அவர்தானே எல்லாவற்றிற்கும் முழுக் காரணம்? ஒன்றுமே இல்லாத ஒரு வழக்கிற்காக ஒரு நபரை இத்தனை பேர் சேர்ந்து தாக்குவதற்கு என்ன காரணம்? ஏதும் இல்லாத விஷயத்திற்கு ஒருவரை இப்படி அடித்தே கொலை செய்திருக்கிறீர்கள். காவல்துறையின் இந்தச் செயலைப் பார்த்தால் மனமே பதறுகிறது” என்று வேதனை தெரிவித்தார்.

 

மேலும், “இந்தச் சம்பவம் காவல்துறையினருக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். அஜித்குமார் மரண வழக்கு முடியும் வரை, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும்” என்று கூறி ஜாமீன் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Right Menu Icon