--- --:--:-- --

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம்..!

2

த்திய பட்ஜெட் 2026-27 தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வருமான வரித்துறை வெளியிட்டுள்ள விளக்கங்கள் (FAQs) சாதாரண வரி செலுத்துவோர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவரையும் உற்று நோக்கச் செய்துள்ளன. வரும் ஏப்ரல் 1, 2026 முதல் “புதிய வருமான வரிச் சட்டம் 2025” நடைமுறைக்கு வரவுள்ளது. இதில் பட்ஜெட்டில் அதிகம் பேசப்படாத, ஆனால் மிக முக்கியமான 15 மாற்றங்கள் குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம்.

 

1. 4 ஆண்டுகள் வரை கணக்கு தாக்கல் செய்ய அவகாசம்

இனி வரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை (ITR) திருத்தி தாக்கல் செய்ய (Updated Return) 48 மாதங்கள் அதாவது 4 ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்கப்படும். ஆனால், தாமதிக்கத் தாமதிக்க அபராத வரி 25%-லிருந்து 70% வரை உயரும். தவறு செய்தவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு என்றாலும், அதற்கான விலை அதிகம்.

 

2. நஷ்டங்களைக் குறைத்துக் காட்ட அனுமதி

 

முன்பு, ஒருமுறை தாக்கல் செய்த கணக்கில் காட்டிய நஷ்டத்தை (Loss) திருத்தப்பட்ட கணக்கில் குறைக்க முடியாது. ஆனால் இனி, தவறுதலாகக் கூடுதலாகக் காட்டப்பட்ட நஷ்டத்தைச் சரிசெய்யப் புதிய சட்டம் வழிவகை செய்கிறது.

 

3. வருமான வரி நோட்டீஸ் வந்தாலும் திருத்தலாம்!

 

வருமான வரித்துறையிடமிருந்து மறுமதிப்பீட்டு நோட்டீஸ் (Reassessment Notice) வந்த பிறகும், குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் திருத்தப்பட்ட கணக்கைத் தாக்கல் செய்யலாம். இதன் மூலம் அபராதத்திலிருந்து தப்பிக்க முடியும், ஆனால் விசாரணை வழக்கம்போலத் தொடரும்.

 

4. சிறு வணிகர்களுக்கு ஒரு மாதம் கூடுதல் அவகாசம்

 

தணிக்கை (Audit) செய்யத் தேவையில்லாத சிறு வணிகங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இது ஜூலை 31-ஆக இருந்தது. ஆனால், சம்பளம் வாங்குவோருக்கு ஜூலை 31-தான் கடைசித் தேதி.

 

5. விபத்து இழப்பீடு வட்டிக்கு முழு வரிவிலக்கு

வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் (MACT) வழங்கும் வட்டித் தொகைக்கு இனி முழுமையாக வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. இதற்கு டி.டி.எஸ். (TDS) பிடிக்கப்படாது என்பது விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பெரிய ஆறுதல்.

 

6. வெளிநாடு வாழ் இந்தியரிடம் சொத்து வாங்கினால் எளிமை

வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து (NRI) இந்தியாவில் சொத்து வாங்குபவர்கள், இனி தனியாக ‘TAN’ எண் பெறத் தேவையில்லை. உங்கள் பான் கார்டை வைத்தே டிடிஎஸ் பிடித்தம் செய்து அரசிடம் செலுத்தலாம். இது காகித வேலைகளைக் குறைக்கும்.

 

7. மேன்பவர் சப்ளை குழப்பத்திற்குத் தீர்வு

நிறுவனங்களுக்கு ஆட்களைத் தரும் காண்ட்ராக்ட் பணிகளுக்கு இனி தெளிவான டிடிஎஸ் (TDS) விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது வணிக நிறுவனங்களுக்குப் பெரிய தெளிவைத் தரும்.

 

8. ஆன்லைனில் டிடிஎஸ் குறைப்பு சான்றிதழ்

குறைவான டிடிஎஸ் அல்லது டிடிஎஸ் விலக்கு கோருபவர்கள் இனி அதிகாரிகளை நேரில் சந்திக்கத் தேவையில்லை. ஆன்லைன் மூலமாகவே இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து விரைவாகச் சான்றிதழ் பெறலாம்.

 

9. முதலீட்டாளர்களுக்கு ஒரே படிவம்

மியூச்சுவல் ஃபண்ட், பாண்ட் வட்டி மற்றும் டிவிடெண்ட் ஆகியவற்றுக்குத் தனித்தனியாகப் படிவங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. டெபாசிட்டரி நிறுவனத்திடம் ஒரே ஒரு உறுதிமொழிப் பத்திரம் (Single Declaration) அளித்தால் போதும்.

 

10. கணக்கில் வராத வருமானத்திற்கு வரி பாதியாகக் குறைப்பு

கணக்கில் காட்டப்படாத முதலீடுகள் அல்லது செலவுகளுக்கு விதிக்கப்பட்ட 60% வரி, இப்போது 30%-ஆக பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. நீங்களாகவே முன்வந்து கணக்கில் காட்டினால் அபராதமும் கிடையாது.

 

11. மதிப்பீடு மற்றும் அபராதம் ஒரே உத்தரவில்!

விசாரணைக்குப் பிறகு வரி மதிப்பீடு மற்றும் அபராதம் ஆகிய இரண்டிற்கும் இனி தனித்தனி உத்தரவுகள் இருக்காது. இரண்டையும் சேர்த்து ஒரே உத்தரவாக (Composite Order) அதிகாரிகள் பிறப்பிக்கலாம். இது வழக்குகளை விரைந்து முடிக்கும்.

 

12. தண்டனையிலிருந்து பாதுகாப்பு

வருமானத்தை மறைத்ததாகக் கருதப்படும் வழக்குகளில் கூட, வரி செலுத்துவோர் கூடுதல் வரியைச் செலுத்திவிட்டு, மேல்முறையீடு செய்யமாட்டேன் என்று உறுதி அளித்தால், அவர்கள் மீது வழக்குத் தொடரப்படுவதிலிருந்தும் அபராதத்திலிருந்தும் பாதுகாப்பு அளிக்கப்படும்.

 

13. தானியங்கி அபராதக் கட்டணம்

தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கத் தாமதிப்பது போன்ற சில தவறுகளுக்கு இனி அதிகாரிகள் விசாரணை நடத்த மாட்டார்கள். கணினி மூலமாகத் தானாகவே அபராதக் கட்டணம் (Automatic Fee) முறையில் அபராதம் விதிக்கப்படும். இதற்கு ‘நியாயமான காரணம்’ ஏதும் ஏற்கப்படாது.

 

14. சிறை தண்டனை பயம் குறைகிறது!

புதிய சட்டத்தில் வருமான வரி குற்றங்கள் பல ‘குற்றமற்றவையாக’ (Decriminalization) மாற்றப்பட்டுள்ளன. சிறை தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளதுடன், சிறிய தவறுகளுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும்.

 

15. பிஎஃப் (PF) மற்றும் இஎஸ்ஐ (ESI) செலுத்துவதில் சலுகை

தொழிலாளர்களின் பிஎஃப் மற்றும் இஎஸ்ஐ பங்களிப்பை முதலாளிகள் வருமான வரி தாக்கல் செய்யும் தேதிக்குள் செலுத்தினாலே வரிச் சலுகை (Deduction) பெற முடியும். இது நிறுவனங்களுக்குப் பெரிய நிம்மதி.

 

இந்த மாற்றங்கள் அனைத்தும் வெறும் வரி விகிதங்களைப் பற்றியது மட்டுமல்ல; வரி செலுத்தும் முறையையே எளிதாக்கும் முயற்சியாகும். டிஜிட்டல் முறைக்கு மாறுவதன் மூலம் வரி செலுத்துவோர் அதிகாரிகளை நேரில் சந்திக்க வேண்டிய அவசியம் குறையும். அதே சமயம், தானியங்கி அபராத முறைகள் இருப்பதால் விதிகளைச் சரியாகப் பின்பற்றுவது மிகவும் அவசியம்.

Right Menu Icon