அயோத்தி ராமர் கோயிலில் தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய பயங்கரவாதிகள்..!
டெல்லியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற சிறிது நேர துப்பாக்கி சண்டைக்கு பின்னர் கைதுசெய்யப்பட்ட அபுயூசுஃப் என்ற ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் சிறப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கப்பட்டு இருப்பதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அபுயூசுஃப் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியது தெரிய வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அபுயூசுஃப்பிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை அவரை கைது செய்த பகுதியிலேயை வைத்து தேசிய பாதுகாப்பு படையினர் செயலிழக்க செய்தனர். பயங்கரவாதி அபுயூசுஃப் ஈரான் நாட்டின் கோரஸ் மாகாணத்தில் இயங்கி வரும் ஐஎஸ் அமைப்பினர் உடன் தொடர்பில் இருப்பதாக டெல்லி காவல்துறை துணை ஆணையர் கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் அந்த பயங்கரவாதி தனது கிராமத்தில் வைத்து வெடிபொருளை பரிசோதித்து பார்த்ததாகவும் டெல்லி காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து அபுயூசுஃப்பின் கூட்டாளிகள் உத்திரப்பிரதேசத்தில் செயல்பாட்டில் இருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று அம்மாநில சட்ட ஒழுங்கு கூடுதல் டிரெக்டர் ஜெனரல் பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.







