நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை ..! உள்ளாட்சித் தேர்தல் தோல்வியால் திமுகவின் எதிர்ப்பை அதிமுக சமாளிக்குமா..?
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சரிவை சந்தித்துள்ள பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. இக்கூட்டத்தொடரில், உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அதிமுக தோல்வியடைந்தது, குடியுரிமைச் சட்ட திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளதால், அதிமுக சமாளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
2020-ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், நாளை சட்டசபை கூடியவுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்துகிறார். அத்துடன் நாளைய கூட்டம் நிறைவடைந்த பின், கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் தலைமையில் கூடும் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அநேகமாக வரும் சனிக்கிழமை வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறும் எனத் தெரிகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு ஏற்பட்ட சரிவு, அனைத்து உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகள், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு அதிமுக ஆதரவளித்தது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க் கட்சியான திமுக திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தக் கூட்டத்தொடரில் காரசார விவாதங்களுக்கு பஞ்சமிருக்காது என எதிர் பார்க்கலாம்.





