கொரோனா பாதிப்பின் காரணமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைப்பு
இலங்கையில் நடைபெற இருந்த நாடாளுமன்ற தேர்தல் கொரொனா பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பிற உலக நாடுகளைப் போல இலங்கையிலும் கொரொனா வைரசின் தாக்கம் காணப்படுகிறது.
இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் முநூற்றுக்கும் அதிகமானோருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் தேர்தல் ஆணைக்குழு கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது தேர்தலை ஒத்தி வைப்பதாக முடிவு செய்யப்பட்டது. பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பெற்ற பிறகு தேர்தலை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இலங்கை அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியது பொதுப்போக்குவரத்து செயல்பட தொடங்கியுள்ளது. மார்ச் 20ஆம் தேதி முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில் சில இடங்களில் மட்டும் அவை தளர்த்தப்பட்டன. தலைநகர் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் வரும் 27ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த பாதிப்புள்ள பகுதிகளில் பொது போக்குவரத்து இயங்க தொடங்கியுள்ளது. 50 சதவீத அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. இரவு எட்டு மணியிலிருந்து காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளையே ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் அலுவலகங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.







