கொரோனாவால் கடும் சிரமத்தை சந்தித்து வரும் ஸ்பெயின்
கொரொனா வைரசால் பெரிதும் நிலைகுலைந்து இருக்கும் ஸ்பெயினில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. ஊரடங்கால் தலைநகர் ஸ்பெயின் உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கண்ணுக்குப் புலப்படாத எதிரியான கொரொனா வைரசால் ஐரோப்பிய கண்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் ஸ்பெயின் முதலிடத்தில் உள்ளது.
அங்கு கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆனாலும் கடந்த சில நாட்களாக உயிரிழப்பும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் ஓரளவு குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இதுபோன்ற சூழலில் தலைநகரில் உள்ள லாபாஸ் என்ற பிரபல மருத்துவமனையில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக இருந்த மருத்துவர் கொரொனா வைரசால் கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார். அதே மருத்துவமனையிலேயே அவர் தொற்றுக்கு ஆளாகி அவர் உயிரிழக்க நேர்ந்துள்ளது. அந்த மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் லாபாஸ் மருத்துவமனை பணியாளர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது தன்னலமற்ற சேவையைப் போற்றும் வகையில் பணியாளர்கள் கரவொலி எழுப்பினர். இதனிடையே ஸ்பெயினில் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் சிறிது நேரம் வீடுகளை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.







